அண்ணாமலை வெளியே நடமாட முடியாது: ஆர்.எஸ். பாரதி பகீரங்க மிரட்டல்
பழைய திமுககாரன் வந்துவிடுவான்; அப்புறம் வெளியே நடமாட முடியாது என்று, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பகீரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.;
தமிழக அரசை பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட விவகாரத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், பெரு நிறுவனம் ஒன்றுக்காக ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடு இடிப்பதுதான் திராவிட மாடலா என்று அண்ணாமலை கேட்டார்.
அதேபோல், திருவாரூரில், வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்டும் முடிவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவே, இப்போது அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் மின்வாரியம் உள்பட பல்வேறு துறைகளின் புள்ளி விவரங்களை கையில் வைத்துக் கொண்டு, திமுக அரசுக்கு எதிராக தினமும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி வருகிறார்.
இதனால், திமுக தரப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடும் எரிச்சலில் உள்ளனர். அவரை பொதுக்கூட்ட மேடைகளில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி - அண்ணாமலை இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தற்போது, அண்ணாமலைக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக அரசின் ஓர் ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்றது. இதில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "தமிழக பாஜகவினர் தற்போது பிள்ளை பிடிக்கும் வேலையை செய்து வருகின்றனர். அதன்படி, திருச்சி சிவாவின் மகனை பிடித்து பாஜகவில் சேர்த்துள்ளனர்.
தமிழகத்தில் நிலையான கொள்கை இல்லாமல் பாஜக நடந்து கொண்டிருக்கிறது. கலவரத்தை தூண்டும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். அவருக்கு எச்சரிக்கை விடுகின்றேன். பழைய திமுககாரன் மீண்டும் வந்து விடுவான். எனவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒருமுறை, அண்ணாதுரையை பற்றி தவறுதலாக கிருபானந்த வாரியார் பேசினார். இதனால், அவர் எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை உருவானது. இதே நிலைமைதான் அண்ணாமலைக்கும் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று ஆர்.எஸ். பாரதி பேசினார்.
திமுக மூத்த தலைவர் ஒருவர், பாஜக மாநிலத் தலைவரை மிரட்டும் தொனியில், பொதுவெளியில் அச்சுறுத்தி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.