ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி பணம் தொடர்பாக பா.ஜ.க. வேட்பாளருக்கு சம்மன்

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி பணம் தொடர்பாக நெல்லை பா.ஜ.க. வேட்பாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

Update: 2024-04-14 13:09 GMT
ரயிலில் பிடிபட்ட பணம் மற்றும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன்.

4 கோடி ரூபாய் பணம் பிடிபட்ட விவகாரம் தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்ப உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரான முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். நெல்லையிலும் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் சதீஷிடம் இருந்து இருந்து ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவின் தொழில் துறை பிரிவு தலைவர் கோவர்த்தனன் என்பவருக்கு தாம்பரம் மாநகர காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள கோவர்த்தனனுக்கு சொந்தமான உணவகத்தில் இருந்து இந்த 4 கோடி ரூபாய் பணம் கைமாற்றப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தாம்பரத்தில் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பிடிபட்ட விவகாரம் தொடர்பாக நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நயினார் நாகேந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News