வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்து: பாமக ராமதாஸ் கடும் அதிர்ச்சி
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே. முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான 7 வினாக்களுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி, வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட இஸ்லாமியர்கள் உள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்குச் சென்னை உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதிக்காத நிலையில், வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டபிறகு, அதன் அடிப்படையில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளப்படவில்லை. இத்தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவர்களின் நலன்களையும் சமூகநீதியையும் பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த ஆட்சியில் இயற்றப்பட்டது என்றாலும், அதிலுள்ள நியாயத்தை தமிழகத்தின் இன்றைய ஆட்சியும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. அதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.
எனவே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று, ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.