தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் 57 பதவிக்கு ஜூன் 10ல் ராஜ்யசபா தேர்தல்
தமிழகத்தில் 6 இடங்கள் உள்பட மொத்தம் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு, ஜூன் 10ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.;
மாநிலங்களில் மக்கள்தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தில், பிரதிநிதித்துவம் அளிக்கப்படுகிறது. அவ்வகையில், தமிழகத்துக்கு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.
மாநிலங்களவையில், 12 பேர் நியமன உறுப்பினர்கள் ஆவர்; இவர்களையும் சேர்த்து மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 245. இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இங்கு உறுப்பினர்களாக உள்ளவர்களில் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் 6 ஆண்டு பதவிக்காலம் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும்.
அவ்வகையில், ஜூன் மாதத்தில் நாட்டின் 15 மாநிலங்களில் 57 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. தமிழகத்தில், ஜூன் 29ம் தேதியுடன் திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ்குமார்; அதிமுகவை சேர்ந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதேபோல், ஆந்திராவில் 4, தெலுங்கானாவில் 2, கர்நாடகத்தில் 4, உத்தரப்பிரதேசத்தில் 11 பேர் உள்பட, நாடு முழுவதும் காலியாக உள்ள, 57 மாநிலங்களவை இடங்களுக்கு, ஜூன் மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், மே 24-ல் தொடங்கி, 31-ல் நிறைவடைகிறது. மனுக்கள் பரிசீலனை, ஜூன் 1-ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற, ஜூன் 3ம் தேதி கடைசி நாளாகும்.
மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல், ஜூன் 10ம் தேதி தேர்தல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என்று, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.