இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியது பற்றி ராகுல் காந்தி

இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகியது பற்றி ராகுல் காந்தி முதல் முறையாக கருத்து தெரிவித்து உள்ளார்.

Update: 2024-01-30 13:17 GMT

ராகுல் காந்தி- ராகுல் காந்தி.

இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து முதல் முறையாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற  தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில்  நடைபெற இருக்கிறது. தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக தேர்தல் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. இதேபோல் இந்த முறை பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிய  எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல கட்சிகள் ஒன்றிணைந்தது.

இதில், இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான  நிதிஷ் குமார். நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவராக நிதிஷ் குமார் இருந்தார். ஆனால், திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு "இந்தியா" கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கை கோர்த்தார்.

இது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணியை முன்னின்று ஒருங்கிணைத்தாலும் தனக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நிதிஷ்குமார் கருதியதாக சொல்லப்பட்டது. குறிப்பாக இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த ஆலோசனையின் போது நிதிஷ்குமார் பெயரைப் பரிசீலனை செய்துள்ளனர். இருப்பினும், ஒருங்கிணைப்பாளராக யாரைப் போடலாம் என்பது குறித்து மம்தா பானர்ஜியுடன் ஆலோசிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியதே நிதிஷ் குமாரை கோபத்தில் தள்ளியுள்ளது. இதுபோன்ற அதிருப்தி காரணமாக இந்தியா கூட்டணியில் இருந்து விலகும் முடிவை நிதிஷ்குமார் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி இதுவரை கருத்து எதுவும் கூறாமல் இருந்து வந்தார். மணிப்பூரில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரை தொடங்கிய அவர் தற்போது பீகார் மாநிலத்திற்குள் நுழைந்து உள்ளார். இந்த நிலையில் தான்  ராகுல் காந்தி தற்போது முதல் முறையாக இன்று மவுனம் கலைத்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

நிதிஷ் குமாரை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்களும் (காங்கிரஸ்) ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் வலியுறுத்தியுனோம். ஆனால், பா.ஜ.க. இதற்கு அச்சப்பட்டது. சாதி வாரி கணக்கெடுப்பு திட்டத்திற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. நிதிஷ் குமார் சிக்கிக் கொண்டார். அவரை புறவாசல் வழியாக வெளியேற பாஜக வழிகொடுத்துள்ளது. சிறிய அழுத்தத்திற்கே அவர் யூ - டேர்ன் அடித்து விட்டார். நிதிஷ் குமார் எங்களுக்கு தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நிதிஷ்குமார் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து எதற்காக விலகினார் என்பதற்கான உண்மையான காரணம் தற்போது ராகுல் காந்தி மவுனத்தை கலைத்திருப்பதன் மூலம் வெளிவந்து உள்ளது.

Tags:    

Similar News