பிரதமர் மோடியின் சாதி பற்றி ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் சாதி பற்றி ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

Update: 2024-02-08 09:20 GMT

பிரதமர் மோடி பிறந்த சாதி பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கியுள்ளன. அதன்படி காங்கிரஸ் ஒரு பக்கம் தொகுதிப் பங்கீட்டில் தீவிரமாக இருக்கும் நிலையில், அக்கட்சியின் ராகுல் காந்தி பாத யாத்திரையை நடத்தி வருகிறார்.

கடந்த 2022இல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் பாரத் ஜோடோ யாத்திரையை நடத்திய நிலையில், அதேபோல இப்போது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை நடத்தி வருகிறார்.

இந்த பாத யாத்திரையில் ராகுல் காந்தி 66 நாட்களில் மொத்தம் 6713 கிமீ பயணிக்க உள்ளார். இந்த யாத்திரை வரும் மார்ச் 20ஆம் தேதி மகாராஷ்டிராவில் நிறைவடைகிறது. ஆனாலும் இந்த யாத்திரை ஆரம்பித்தது முதலே பல சர்ச்சைகள் இதைச் சுற்றி இருக்கிறது. ராகுல் காந்தி கோயிலுக்கு நுழைய அனுமதி மறுப்பு, அவரது கார் மீது தாக்குதல் எனப் பல சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறின. இப்போது ராகுல் காந்தி ஓடிசாவில் நடைப்பயணம் சென்று வருகிறார். இதற்கிடையே இன்று பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது பேசிய ராகுல் காந்தி , பிரதமர் நரேந்திர மோடி தனது ஜாதி குறித்து பொய் கூறியுள்ளதாகப் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பிரதமர் மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் இல்லை என்ற ராகுல் காந்தி, அவர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஒடிசாவின் ஜார்சுகுடாவில் பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி ஓபிசி பிரிவில் பிறக்கவில்லை. அவர் குஜராத்தில் டெலி சாதியைச் சேர்ந்தவர். கடந்த 2000ஆம் ஆண்டில் பாஜக அரசு தான் டெலி பிரிவினரை ஓபிசியாக அறிவித்தனர். அதாவது. அவர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவராகவே பிறந்தார். அவர் ஓபிசியில் பிறக்கவில்லை, பொது ஜாதியில் பிறந்தவர் என்பதால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க மாட்டார்" என்று அவர் கடுமையாகச் சாடினார்.

பாரத் ஜோடோ நியாய யாத்திரை அண்டை மாநிலமான ஒடிசாவில் இருந்து இன்று சத்தீஸ்கரில் ஆரம்பிக்கிறது. கடந்த நவம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், அதன் பிறகு ராகுல் காந்தி சத்தீஸ்கருக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.வரும் பிப். 14ஆம் தேதி வரை சத்தீஸ்கரில் அவர் நடைப்பயணம் செல்லும் நிலையில், அதன் பிறகு அவரது யாத்திரை ஜார்கண்டிற்குச் செல்கிறது. 

முன்னதாக பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சை ஏற்பட்டது. அதாவது ராகுல் காந்தி பாத யாத்திரையின் போது நாய்க் குட்டி ஒன்றுக்கு பிஸ்கட் வழங்க முயன்றார். அந்த வீடியோவை பகிர்ந்த பாஜகவினர், ராகுல் காந்தி நாய்க்கு அளித்த பிஸ்கட்டை அது சாப்பிடாத நிலையில், அதே பிஸ்கட்டை தொண்டருக்கு வழங்கியதாக விமர்சித்தது. பாஜக தலைவர்கள் பலரும் அதைச் சாடினர். இது பெரிய சர்ச்சையான நிலையில், ராகுல் காந்தி இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அதாவது கூட்டமாக அதிகமாக இருந்ததால் நாய் பயந்துவிட்டதாகவும் அதனால் உரிமையாளரிடம் பிஸ்கட்டை கொடுத்து நாய்க்குத் தரச் சொன்னதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த சின்ன விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிதாக ஆக்குகிறார்கள் எனத் தெரியவில்லை என்றும் கூறியிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் மோடி சாதி பற்றி பேசியது சர்ச்சைக்குள்ளாகி நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்ற தீர்ப்பில் ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் தனது எம்பி பதவியை இழந்தார். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தண்டனையில் இருந்து விடுதலை பெற்றார்.

இந்த நிலையில் தான் ராகுல் காந்தி தற்போது மீண்டும் பிரதமர் மோடி பிறந்த சாதி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News