வேலையில்லா திண்டாட்டம் குறித்து மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
வேலையில்லா திண்டாட்டம் குறித்து மோடி மீது ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.;
நமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மிக மோசமாக இருப்பதாக விமர்சித்த ராகுல் காந்தி, இதைச் சரி செய்யப் பிரதமர் மோடி முற்றிலுமாக தவறிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி இப்போது மத்தியப் பிரதேசத்தில் தான் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர் மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த ராகுல் காந்தி, இந்த தேசமே ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கிவிட்டு பசியால் சாக வேண்டும் என்றே பிரதமர் மோடி விரும்புவதாகத் தெரிவித்தார்.
பாத யாத்திரை: மத்தியப் பிரதேசத்தின் சரங்பூரில் பாத யாத்திரை மேற்கொண்ட போது அங்கே கூடியிருந்த பாஜகவினர் திடீரென ராகுல் காந்தியை நோக்கி மோடி, மோடி என்றும் ஜெய் ஸ்ரீராம் என்றும் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அங்கே வந்த பாஜகவினர் ராகுல் காந்திக்கு திடீரென உருளைக்கிழங்கையும் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்ட நிலையில், ராகுல் காந்தி நமது நாட்டில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் பேசினார். வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கப் பிரதமர் மோடி எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று சாடிய அவர், இதனால் இளைஞர்கள் நாள் முழுவதும் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்த்து பொழுதைக் கழிப்பதாகவும் விமர்சித்தார்.
ராகுல் காந்தி மேலும் கூறுகையில், "நீங்கள் நாள் முழுக்க உங்கள் மொபைலை பார்த்து, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு விட்டு பின்னர் பசியால் இறக்க வேண்டும் என்றே பிரதமர் மோடி விரும்புகிறார். அவர் நாட்டில் அதிகரிக்கும் வேலையின்மையைச் சரி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அவர் சாடினார். தொடர்ந்து அக்னிவீர் திட்டம் குறித்து பேசிய ராகுல் காந்தி, "முன்பு நமது இந்திய ராணுவம் இளைஞர்களுக்கு இரண்டு உத்தரவாதங்களை அளித்தது.. ஒன்று இளைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும், இரண்டாவதாக, அவர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும். ஆனால் தற்போதுஅக்னிவீர் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து இருக்கிறார்கள். இத்திட்டத்தின் கீழ் நான்கு பேரில் ஒருவர் மட்டுமே இறுதியாகத் தேர்வாவாராம். இதில் நீக்கப்படும் மூன்று பேரும் நிச்சயம் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசியாக இருப்பார்கள்" என்றார்.
வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாகக் கடந்த ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். நமது நாட்டில் வேலையின்மை என்பதை அண்டை நாடுகளை விட மோசமாக இருப்பதாக அவர் விமர்சித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை குவாலியரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலையின்மை இரட்டிப்பாக உள்ளது. பாகிஸ்தானில் வேலையின்மை 12%ஆக இருக்கும் நிலையில், இங்கே அது 23 சதவீதமாக இருக்கிறது. வங்கதேசம் மற்றும் பூடானில் உள்ள நாடுகளைக் காட்டிலும் நமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மிக மோசமாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மிக மோசமாக இருக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.