புதுச்சேரி சிறந்த மாநிலமாக மாறும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

புதுச்சேரி சிறந்த மாநிலமாக அடுத்த தேர்தலுக்குள் நிச்சயம் மாறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்;

Update: 2022-04-25 02:20 GMT

புதுச்சேரி சிறந்த மாநிலமாக அடுத்த தேர்தலுக்குள் நிச்சயம் மாறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று புதுச்சேரியில் காணொலிக் காட்சி வாயிலாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மகான்கள், அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் புரட்சியாளர்களின் புனித பூமி புதுச்சேரி.

சிறந்த தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதி மற்றும் ஒப்பற்ற புரட்சியாளரும் சிறந்த தத்துவஞானியுமான ஸ்ரீ அரவிந்தர் ஆகியோர் தங்கள் பங்களிப்பை அளித்துள்ள இடம் இது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது புதுச்சேரியை சிறந்த மாநிலமாக மாற்றப் போவதாக பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார், அடுத்த தேர்தலுக்கு முன்பு இது நிச்சயம் நடக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

புதுச்சேரியில், பாரம்பரிய சுற்றுலாவை ஈர்க்கும் வகையில் பிராங்கோ-தமிழ் கிராமம் அமைக்கப்படும், மேலும் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் கண்காட்சி வசதிகளை ஏற்படுத்தும் வகையில் மூன்று பழைய கிடங்குகளில் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. இம்மாநிலத்தில் இந்த வளர்ச்சிப் பணிகள் தொடரும். மத்திய அரசின் 90-க்கும் மேற்பட்ட திட்டங்கள், பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடிப் பண பரிமாற்றத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதுவரை 500 கோடி ரூபாயை 6 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளது என்றார்.

Similar News