தமிழ்நாட்டில் பிறந்து ஆளும் தேசியக்கட்சிக்கு தலைவரான ஜனா பிறந்த நாளின்று

ஜனா வக்கீலாக பணி பின்னர் ஜன சங்கத்தில் இணைந்து அரசியலில் நுழைந்து ஜனதாக் கட்சி மற்றும் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டார்.

Update: 2021-05-24 02:49 GMT

மதுரையில் பிறந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி.

சட்டம் பயின்ற ஜனா, வக்கீலாக பணியாற்றினார். பின்னர் ஜன சங்கத்தில் இணைந்து அரசியலில் நுழைந்தார். அதன் பின்னர் ஜனதாக் கட்சி மற்றும் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டார்.தமிழ்நாட்டில் இருந்து ஆளும் தேசியக் கட்சிக்கு தலைவர் ஆனவர் காமராஜருக்கு பிறகு ஜனா கிருஷ்ணமூர்த்தியே ஆவார்.

ஜனா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஜனா கிருஷ்ணமூர்த்தி மே 24, 1928-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1940 ம் ஆண்டு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கில் (RSS) உறுப்பினரானா்.

சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, வெற்றிகரமாக வழக்கறிஞர் தொழிலை நடத்தி வந்தார். அப்போதைய RSS தலைவரான கோல்வாக்கர் அவர்களின் அறிவுரையின் பேரில் அரசியலில் ஈடுபட்டார். 1965-ல் மதுரை உயர் நீதிமன்றத்தில் நடத்தி வந்த வழக்கறிஞர் பயிற்சியை கைவிட்டார். அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் அறிவுறுத்தலின் படி, பாரதிய ஜனதா சங்கின் (BJS) தமிழ்நாடு மாநில செயலாளர் ஆனார். அவ்வளவாக அறியப்படாத BJS கட்சியை ஆதியில் இருந்து வளர்க்கப் பாடுபட்டார்.

1975-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனப்படுத்திய போது, கிருஷ்ணமூர்த்தி BJS கட்சியின் தமிழ்நாடு எதிர்ப்பு இயக்கத்தின் செயலாளர் ஆக இருந்தார். 1977-ல் BJS கட்சி, ஜனதா கட்சியுடன் (JP) ஒன்றிணைந்த போது, தமிழ்நாட்டில் ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். 1980-ல் பாஜகவை (BJP) உருவாக்க வாஜ்பாய், அத்வானி, S.S.பண்டாரி, குஷாபாஹு தாக்ரே, ஜெகந்நாதராவ் ஜோஷி ஆகியோருக்கு உதவி புரிந்தார். பா.ஜ.க உருவானவுடன் அதன் தேசிய செயலாளர் ஆனார். 1983-ல் பா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் ஆகவும், 1985-ல் இருந்து அதன் துணைத் தலைவர்(Vice -President) ஆகவும் இருந்தார்.

1980 முதல் 1990 வரை தென் மாநிலங்களில் பா.ஜ.க-வை விரிவுபடுத்த பெரிதும் பாடுபட்டார். 1993-ல் அத்வானியின் வேண்டுகோளின் பேரில் டெல்லிக்கு சென்றார். 1995 முதல் பா.ஜ.க தலைமையகத்தின் முழுப் பொறுப்பாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். 1998-ல் மக்களவைக்கு, தெற்கு சென்னை பகுதியில் போட்டியிட்டு மிகக் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்த போது மத்திய சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2001-ல் பங்காரு லக்ஷ்மனுக்குப் பிறகு பா.ஜ.க-வின் தேசிய தலைவர் ஆனார். தமிழ்நாட்டில் இருந்து ஆளும் தேசியக் கட்சிக்கு தலைவர் ஆனவர் காமராஜருக்கு பிறகு ஜனா கிருஷ்ணமூர்த்தியே ஆவார். 2002 வரை அப்பொறுப்பில் இருந்தார்.

காமராஜர் போல அவருடைய குடும்பம் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சரவையிலிருந்து விலகினாலும் குஜராத்திலிருந்து ராஜ்ய சபா உறுப்பினராய்த் தொடர்ந்தார். பாதுகாப்பு, மனுக்கள் என பாராளுமன்றத்தின் பல குழுக்களில் அவர் இருந்தார். பெட்ரோல் கலப்படம் குறித்து ராஜ்ய சபாவில் அவர் சமர்ப்பித்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அவர் தமிழக பா.ஜ.க தலைவராய் இருந்த போது, காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், பாஜகவில் சேர பெருமளவு முயற்சித்ததாகவும் அதை ஜனா கிருஷ்ணமூர்த்தி தடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய 79-வது வயதில்,2007 ம் ஆண்டு செப்டம்பர் 25  ம் தேதி சென்னையில் அவர் இயற்கை எய்தினார்.அவருக்கு மனைவி, 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.


Tags:    

Similar News