அமித்ஷா போட்டியிடும் குஜராத் காந்தி நகர் தொகுதியின் அரசியல் பின்னணி

அமித்ஷா போட்டியிடும் குஜராத் காந்தி நகர் தொகுதியின் அரசியல் பின்னணி

Update: 2024-03-03 17:39 GMT

மத்திய அமைச்சர் அமித்ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடும் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக சரித்திரமும் இல்லை. பாஜகவின் முதுபெரும் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி சுமார் 60% வாக்குகளை ஒவ்வொரு தேர்தலிலும் பெற்று வரலாறு படைத்த தொகுதியாகவும் உள்ளது.

18-வது லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 34 மத்திய அமைச்சர்கள், முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2-வது முறையாக போட்டியிடும் குஜராத்தின் காந்தி நகர், பாஜகவின் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக 40 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இத்தொகுதியில் 1984-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஜிஐ பட்டேல் போட்டியிட்டு வென்றார். அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 2,754 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றார். இதுதான் காந்தி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கடைசியாக வென்ற தேர்தல். இதன் பிறகு 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி காந்தி நகர் தொகுதியில் வெற்றி பெறவே முடியவில்லை.

1989-ம் ஆண்டு காந்தி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ஷங்கர் சிங் வகேலா, முதன் முதலாக களமிறங்கினார். இத்தேர்தலில் ஷங்கர் சிங் வகேலா 66.22% வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு 30.33% வாக்குகள்தான் கிடைத்தது. ராஜீவ் படுகொலை அலையால் பயனில்லை: 1991-ல் பாஜக நிறுவனர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி போட்டியிட்டார். இத்தேர்தலில் அத்வானி பெற்ற வாக்குகள் 57.97%. காங்கிரஸுக்கு 37.56% வாக்குகள் கிடைத்தன. ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து வீசிய பேரனுதாப அலை, காந்தி நகரை உலுக்கவில்லை.

1996-ல் பாஜக நிறுவனர்களில் ஒருவரான வாஜ்பாய் களம் கண்டார். அத்தேர்தலில் வாஜ்பாய்க்கு 66.38 % வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸுக்கு 27.63% வாக்குகளே கிடைத்து. ஆனால் காந்தி நகர் தொகுதி எம்பி பதவியை வாஜ்பாய் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலிலும் பாஜகவின் விஜய் ஹரீஷ் சந்திர படேல் 52.61% வாக்குகளை அள்ளினார்.  1998 லோக்சபா தேர்தலில் மீண்டும் அத்வானி போட்டியிட்டு 59.86% வாக்குகளையும் 1999-ல் அத்வானி களம் கண்டு 61.14%; 2004-ல் அத்வானியே போட்டியிட்டு 61.04% வாக்குகளையும் பெற்றார். 2009 லோக்சபா தேர்தலிலும் அத்வானி தொடர்ந்து போட்டியிட்டு 54.89% வாக்குகளையும் 2014 தேர்தலில் 68.12% வாக்குகளையும் பெற்றார்.

2019 லோக்சபா தேர்தலில் அமித்ஷா போட்டியிட்டு 69.67% வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தலில் அமித்ஷாவுக்கு 8,94,000 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு 3,37,610 வாக்குகளும் கிடைத்தன. அதாவது காங்கிரஸ் வேட்பாளரை விட அமித்ஷா 5,57,014 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். 

இந்த பின்னணியில் அதாவது 40 ஆண்டுகளாக காங்கிரஸ் வெற்றியே பெறாத, பாஜகவுக்கு சுமார் 60% வாக்குகள் இருக்கும் குஜராத்தின் காந்தி நகர் லோக்சபா தொகுதியில் 2-வது முறையாக அமித்ஷா களமிறங்கி உள்ளார். இத்தேர்தலிலும் அமித்ஷா சுமார் 60%-க்கும் அதிகமாக வாக்குகளைப் பெறுவார் என்பது பாஜகவினரின் எதிர்பார்ப்பு ஆக உள்ளது.

Tags:    

Similar News