ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி குடும்ப அரசியல்: பிரதமர் மோடி தாக்கு
குடும்ப அரசியல் கட்சி, நமது நாட்டின் ஜனநாயகம் மற்றும் இளைஞர்களின் மிகப்பெரிய எதிரி என்று, ஐதராபாத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி சாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னைக்கு வருகை தரும் முன்பாக, தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் பேசியதாவது:
இந்தியா, 21ஆம் நூற்றாண்டில் இந்தியா 'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் 'மேக் இன் இந்தியா' என்ற கனவோடு முன்னேறி வருகிறது. இந்தியாவில் புதிதாக உருவாகியுள்ள சிறு நிறுவனங்கள், சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. உலகளவில், புதிய நிறுவனங்கள் அதிகரிப்பதில் இந்தியா, மூன்றாவது நாடாக விளங்குகிறது.
இந்தியாவில், குடும்ப அரசியல் கட்சிகள் ஆதிக்கம் உள்ளன. அக்கட்சிகளால் நாடு ஊழல் மயமாகின. குடும்ப அரசியல் கட்சிகள், ஒரு குடும்பத்திற்காகவே மட்டுமே இயங்குகின்றன. 'குடும்ப அரசியல் ' கட்சி ஒரு அரசியல் பிரச்சினை மட்டுமல்ல, நமது நாட்டின் ஜனநாயகம் மற்றும் இளைஞர்களின் மிகப்பெரிய எதிரி.
ஒரே குடும்பத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை, நாடு கண்டிருக்கிறது. குடும்ப அரசியல் கட்சிகளால், அரசியலுக்கு இளைஞர்கள் வரும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
குடும்ப அரசியல் கட்சிகள், தங்களின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றனர். ஏழை மக்களைப் பற்றிக் கவலைப்படாத இந்தக் கட்சிகள், ஒரு குடும்பம் எப்படி ஆட்சியில் இருக்க முடியுமோ அவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில் தான் அவர்களின் நோக்கமாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.