பிரமாண்டமான பேரணியுடன் உ.பி.யில் பிரச்சாரத்தை துவக்கினார் பிரதமர் மோடி

பிரமாண்டமான பேரணியுடன் உ.பி.யில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்து உள்ளார்.

Update: 2024-01-25 16:45 GMT

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாஹர் நகரில் பிரம்மாண்டமான பா.ஜ.க. தேர்தல் பேரணி இன்று நடந்து முடிந்துள்ளது. இந்த பேரணியில் இருந்து மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்றைய தினம் பௌர்ணமியில் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா, கடந்த 22ம் தேதி பிரம்மாண்டமாக நடந்தது.இதற்கான இந்த சடங்குகள் அனைத்தையுமே பிரதமர் மோடி முன்னின்று செய்தார். 5 வயது குழந்தை ராமர் சிலையின் பாதத்தில் பிரதமர் மோடி அமர்ந்து அர்ச்சகர் உதவியுடன் பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார்.

ராமர் சிலை பிரதிஷ்டைக்காக மொத்தம் 84 வினாடி நேரம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே, 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது. பால ராமர் சிலையின் கண்களும் திறக்கப்பட்டன.

இந்த கும்பாபிஷேகம் முடிந்ததையடுத்து, உத்தரபிரதேசத்திலுள்ள புலந்த்சாஹரில் இன்று பாஜகவின் பேரணி நடத்தப்பட்டது.இந்த பேரணி, வரப்போகும் எம்பி தேர்தலுக்கான பிரச்சாரத்தின் தொடக்கமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.இதற்காக, உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பிராந்திய நகரத்தில் கட்சித்தொடண்டர்களும், தலைவர்களும், நிர்வாகிகளும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.


உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பிராந்தியத்தை பொறுத்தவரை, கடந்த 2019-ல் நடந்த எம்பி தேர்தலில், மொத்தமுள்ள 14 தொகுதிகளில், பாஜக தேர்தலில் 8 இடங்களில் அபார வெற்றி பெற்று, மெஜாரிட்டியை தக்கவைத்திருக்கிறது. இதே வெற்றியை வரப்போகும் தேர்தலிலும் பெற வேண்டும் என்பதற்கான முயற்சியிலும் இறங்கி வருகிறது. இந்த வெற்றியை பெற, கடுமையாக உழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், இன்றைய தினமே, தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் தொடங்கி உள்ளார். இந்த பிரமாண்ட பேரணியில் சுமார் பல லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். அந்தவகையில், இன்றைய பேரணி, பாஜகவுக்கான எழுச்சி பேரணியாக வர்ணிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், பாஜகவின் வேகம் விஸ்வரூபமெடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரை, ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல்களை நடத்துவது வழக்கம்.அதிலும், மாநிலங்களை பொறுத்து, பல்வேறு கட்டங்களாக தேர்தலை நடத்துவதும் வழக்கம். அந்தவகையில், வரும் ஏப்ரல் 2வது வாரத்தில் தொடங்கி மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்தவகையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த பணிகளை கடந்த 2 மாதங்களாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநில தேர்தல் ஆணையர்களுடன் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் அளித்து வருகிறது.

உ.பி.,யின் புலந்த்ஷாஹரில் நடந்த பேரணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறுகையில், "முந்தைய உத்தரபிரதேச அரசுகள் ஆட்சியாளர்களாக நடந்து கொண்டன, மாநிலத்தை கவனிக்கவில்லை. பல தலைமுறைகள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருந்தது, மேலும் தேசத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. எப்படி? மிகப்பெரிய மாநிலம் பலவீனமாக இருக்கும்போது நாடு வலுவாக இருக்குமா? என்று பேசி உள்ளார்.

Tags:    

Similar News