மனித நேய மக்கள் கட்சியை தடை செய்யக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு
மனித நேய மக்கள் கட்சியை தடை செய்யக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அர்ஜுன் சம்பத் மனு அளித்தார்.;
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.
மனிதநேய மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் ஒரு மனு அளித்தார்.
அந்த மனுவில் மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் தொடர்பாக தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் குறிப்பாக இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ , கம்யூனிச கட்சிகள் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களது செயல்பாடுகள் இறையாண்மைக்கு எதிராக உள்ளன. எனவே அவர்களது பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.மேலும் மனிதநேய மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டியில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு அம் மாநில அரசும், மத்திய அரசும் தீவிர நடவடிக்கைகளை அடுத்து வருகிறது. தற்போது அங்கு நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரத்தின்போது இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு கொடுமையான ஒரு குற்றமாகும்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன. மணிப்பூர் மாநில பிரச்சினையை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி விட்டன என்றார்.