வெள்ளம் பாதித்த குடும்பங்களுக்கு ரூ.20 ஆயிரம்: ஓ.பி.எஸ். கோரிக்கை
மழை வெள்ளத்தால் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.20,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.;
இது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகனில் பெரும்பாலான மழைநீர் தேங்கி, அங்குள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால், ஏழை எளிய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், காய்கறிகளின் விலைகள் உச்சத்திற்கு சென்றுள்ளது.
தீபாவளி தினத்தன்று 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று 100 ரூபாய், 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், கேரட் கிலோ 100 ரூபாய்க்கும், பீன்ஸ் கிலோ 90 ரூபாய்க்கும், கத்தரிக்காய் கிலோ 85 ரூபாய்க்கும், குடமிளகாய் கிலோ 150 , ரூபாய்க்கும், வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. மலிவு விலையில் காய்கறி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலைகளில் நீர் தேங்கி இருப்பதால், மக்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதால், இந்த மாதம் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரணமாக 2015 ஆம் ஆண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக 5,000 ரூபாய் செலுத்தியவர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. எனவே, வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக 20,000 ரூபாய் வழங்கவேண்டம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.