‘ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. வெற்றி செல்லாது’-சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. வெற்றி செல்லாது சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

Update: 2023-07-06 10:56 GMT

ஓ பி  ரவீந்திரநாத் எம் பி.

தேனி எம்.பி. தொகுதியில் 2019-ல் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019ம்ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற  தேர்தலில் தமிழகத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் அ.தி.மு.க.  வெற்றி பெற்றது. மற்ற 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியை தழுவியது.

தேனி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அப்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளகராவும், துணை முதல்வராகவும் இருந்த ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திர நாத் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்  வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்ககோரி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் ஓபி ரவீந்திரநாத் அதிகார துஷ்பிரயோம் செய்தும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் தாக்கல் செய்த சொத்து கணக்கும் சரியல்ல தேர்தல் அதிகாரி அதனை ஏற்றது தவறு என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், தேனி எம்.பி. தொகுதியில் 2019-ல் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது எனவும் இன்று  தீர்ப்பளித்தார்.

மேலும் ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்த நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. தற்போது இ.பி.எஸ் அணி, ஓ.பி.எஸ் அணி என இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இ.பி.எஸ். அணியே முன்னிலையில் உள்ளது. ஓ.பி.எஸ். அணி  பின்னடைவை சந்தித்து வந்தாலும் அவரது அணி நிர்வாகிகள் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆக இருப்பது செல்லாது என நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News