ஒரே நாடு ஒரே தேர்தல்: பா.ஜ.விற்கு எடப்பாடி பழனிசாமி பகிரங்க ஆதரவு
ஒரே நாடு ஒரே தேர்தல்: பா.ஜ.விற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பகிரங்க ஆதரவு தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒன்றாக தேர்தல் நடத்த வழிவகை செய்யும் ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையை ஆதரிப்பதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 18ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நீண்டகால கொள்கை முடிவுகளில் ஒன்றான ஒரே நாடு ஒரே தேர்தல், அதாவது நாடு முழுவதும் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சீர் திருத்தங்கள் பற்றி ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் மத்திய அரசு அமைத்து உள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுடன், தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரலாம் என ஏற்கனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார். இந்நிலையில் தற்போது மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை முடிவிற்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில், "ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அ.தி.மு.க .தீவிரமாக ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்றும், இது நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே முக்கியமாக இருக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி அதில் குறிப்பிட்டு உள்ளார்.
மத்திய மோடி அரசிற்கு எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக தெரிவித்துள்ள இந்த ஆதரவு இந்திய அளவில் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.