யாருக்கும் சலாம் போடமாட்டேன்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு

கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்;

Update: 2023-03-18 08:57 GMT

பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை அமைந்தகரையில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை. பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியிருந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சு பா.ஜ.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை ஆரம்பத்திலேயே நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகள் எங்கள் இலக்கு என்று கூறி வருகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் இது சாத்தியமா? அவர்கள் எத்தனை சீட் ஒதுக்குவார்கள் என்பதே கேள்விக்குறி. தி.மு.க. சொல்வதை கேட்டு காங்கிரஸ் இருப்பதுபோல் பா.ஜனதாவும் இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. விரும்புகிறது.

இப்படிப்பட்ட சூழலில் அ.தி.மு.க.வை அனுசரித்து போகும்படி டெல்லி தலைவர்கள் சொல்வதை எப்படி ஏற்க முடியும் என்று அண்ணாமலை கருதுகிறார்.

தமிழகத்தில் பா.ஜனதாவை திராவிட கட்சிகள் வளர விடாமல் தடுக்கும். ஒரு சில தொகுதிகளை மட்டுமே தருவார்கள். அதற்காக கையேந்த வேண்டுமா? கட்சி எடுத்த தவறான முடிவுகள் அதன் வளர்ச்சியை தடுத்து இருக்கிறது. இதையும் தாண்டி கூட்டணிதான் தேவை என்றால் பதவி தேவையில்லை. சாதாரண தொண்டராகவே இருக்கலாம் என்பது அண்ணாமலையின் முடிவு.

டில்லி மேலிடம் ஏதோ ஒரு திட்டத்துடனேயே அதிகாரியாக இருந்தவரை மாநில தலைவராக நியமித்தது. எதிர்பார்த்தது போலவே அவரது தலைமையின் கீழ் பா.ஜ பேசப்படும் கட்சியானது என்பது டில்லி தலைமைக்கும் தெரியும். எனவே அவ்வளவு எளிதில் அவரை விட்டுக்கொடுக்காது என்றும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் வருகிற 26 ந்தேதி அண்ணாமலை டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடியையும், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து எடுத்து கூற உள்ளார்.

Tags:    

Similar News