நாட்டின் இறையாண்மைக்கு உகந்ததல்ல: மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
நாட்டின் இறையாண்மைக்கு உகந்ததல்ல என பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.;
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி -பிரதமர் மோடி.
இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது என்று பிரதமர் மோடியை நேரடியாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள் என்றும் செல்வத்தை எல்லாம் பறித்துக் கொள்வார்கள் என்றும் பேசியிருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், பலரும் பிரதமர் மோடியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த சர்ச்சையே ஓயாத நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மக்கள் செல்வத்தைப் பறித்துவிடும் என்று பிரதமர் மோடி மீண்டும் பேசினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் மோடியின் பேச்சை கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.
இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில், உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முன்னதாக முதல்வர் மு.க ஸ்டாலினும் மோடியின் பேச்சை கண்டித்து இருந்தார். மு.க ஸ்டாலின் கூறும் போது, "பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப்பேச்சு இழிவானதும், மிகவும் வருத்தத்திற்குரியதும் ஆகும். தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் மோடி.
வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் அசலான உத்தரவாதங்கள். அவரது இத்தகைய அப்பட்டமான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சைக் காதில் வாங்காதது போல் இருக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலைமை என்பதன் சுவடே இன்றி அப்பண்பையே கைவிட்டுள்ளது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.