தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறி உள்ளார்.
அதிமுக நிர்வாகி படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன் (வயது45). அதிமுக மாவட்ட பிரதிநிதியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். முன்பு கவுன்சிலராக இருந்துள்ளார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புஷ்பநாதன் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த புஷ்பநாதன் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் கடலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூரில் அதிமுக நிர்வாகி புஷ்பநாதனை படுகொலை செய்தவர்களை துரிதமாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் அவர்கள் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதன் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டில் விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். விடியா ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. பகல் - இரவு என்று பாராமல், மக்கள் எப்போதும் அச்சத்துடனேயே நடமாடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்க, தான் சட்டம் ஒழுங்கை சிறப்புற காத்து வருவதாக மு.க.ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக்கொள்வது நகைமுரண். புஷ்பநாதன் அவர்களைப் படுகொலை செய்தோரை துரிதமாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.