பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வைக் கண்டித்து அக்கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவர், தேவகோட்டை, காரைக்குடி நகரத் தலைவர்கள் உட்பட பலர் ராஜினாமா கடிதம் கொடுத்துக்கிட்டிருக்காய்ங்க
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வி அடைந்தார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் தனது தோல்விக்குக் கட்சி நிர்வாகிகள் சிலர்தான் காரணம் என ஹெச்.ராஜா கூறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திடீரென பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜூம் மாநிலத் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளார்.
மேலும் காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன் அவரது கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஹெச்.ராஜா தனது தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயாமலும், சுயபரிசோதனை செய்து கொள்ளாமலும், தான் செய்த தவறை மறைப்பதற்காக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்,'' எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜ் கூறும்போது ''நான் ராஜினாமா செய்தது உண்மைதான். இன்னும் ஓரிரு நாட்களில் செய்தியாளர்களை சந்தித்து உண்மையைக் கூறுகிறேன். தேவகோட்டை, காரைக்குடி நகர நிர்வாகிகள், கண்ணங்குடி, சாக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து ராஜினாமா கடிதம் கொடுத்து வருகின்றனர்,'' என தெரிவித்துள்ளார்