எங்களின் ஒரு நாள் ஊதியத்தை எடுத்துக் கொள்ளுங்கள்-அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு முதலமைச்சருக்கு வேண்டுகோள்

Update: 2021-06-10 01:57 GMT

கொரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஜூன் மாத சம்பளத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று தமிழக முதல்வருக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் 2ம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் பரவி வருகிறது. இதனால் பாதிப்புகள் உச்ச அளவில் பதிவாகியது. தமிழக அரசு கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளுக்காக அனைத்து விதமான பணிகளையும் செய்து வருகிறது. தடுப்பூசி, சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றை கொள்முதல் செய்வதற்கும் அதிக அளவிலான தொகை செலவிடுகிறது.

இதனால் முதல்வர் கொரோனா நிவாரண தொகை வழங்குமாறு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று பல தரப்புகளில் இருந்தும் தங்களால் இயன்ற நிவாரணத் தொகை வழங்கிவந்தனர். கடந்த மாதம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மே மாத ஊதியத்தில் இருந்து ஒரு நாள் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக பிடித்துக் கொள்ளுமாறு அறிவித்தனர். தற்போது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சா. அருணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சிறந்த முறையில் செய்து வரும் தமிழக முதல்வருக்கு பாராட்டுகள். கடந்த மாதம் முதல்வரின் நிவாரண நிதிக்கு எங்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொள்ளுமாறு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தோம். அதேபோல், தற்போதும் கொரோனா தடுப்பு பணிக்கு நிதி தேவையாக உள்ள சூழல் நிலவுவதால், ஜூன் மாத ஊதியத்தில் இருந்து ஒரு நாள் சம்பளத்தை எடுத்துக் கொள்ளுமாறு முதலவரிடம் கேட்டுக் கொள்கிறோம். மேலும், அதனை கொரோனா நிவாரண நிதியாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News