கூட்டுறவுப் பணிகளில் சேர்வதற்கான பணி ஆணை விரைவில் வழங்கப்படும்-அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

Update: 2021-06-09 11:19 GMT

அமைச்சர் ஐ.பெரியசாமி

கூட்டுறவுப் பணிகளில் சேர்வதற்கான கடந்த ஆட்சியில் நேர்காணல் முடிந்தவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கூட்டுறவுத்துறை பதிவாளர் சுப்ரமணியன், ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் தென் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருட்கள் தொகுப்பு ஆகியவை தடையின்றி விரைவாக சென்றடைவதற்கு தேவையான ஆலோசனைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

ஆய்வுக்குகூட்டத்திற்கு பிறகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன்கள் வழங்க ரூ.11,500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு குறைபாடு இல்லாமல் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும் விவாதித்தோம். இந்த அரசு எல்லா துறைகளில் சிறப்பாக செயல்படுகிறது.

விவசாயிகளுக்கு, கொரோனாவை கட்டுப்படுத்துவதோடு இந்த நெருக்கடியான காலத்திலும் ஏழை எளிய மக்களுக்கு முழுமையாக அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். மழையால் சேதமடையும் விளை பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உடனே உரிய நிவாரணம் வழங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு தள்ளுபடி கொடுத்து உள்ளதாக நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து ஆய்வு செய்து, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுறவுப் பணிகளில் சேர்வதற்கான கடந்த ஆட்சியில் நேர்காணல் முடிந்தவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Similar News