இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை என்னாச்சு முதலமைச்சர் சார் - பாஜக தலைவர் டிவீட்
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என பாஜக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த பல்வேறு கட்சியினரும் மக்களை கவரும் விதத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக அறிவித்தனர். அவற்றில் மிக முக்கியமாக வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து ஒரு மாதங்கள் ஆன நிலையில் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக தலைமையிலான அரசு செய்து வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு நிவாரணத்தொகையையும் அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளின் படி இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்னும் செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன், 'சட்டமன்ற தேர்தலின் போது எங்கள் தாய்மார்களுக்கும், தங்கைமார்களுக்கும் மாதந்தோறும் தரப்படும் என்று கூறிய ஆயிரம் ரூபாயை தருமாறு முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்' என ட்வீட் செய்துள்ளார்.