மோசடி வழக்கு தள்ளுபடி இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்

மோசடி வழக்கை தள்ளுபடி செய்ய நீதிபதி மறுத்து, புதிதாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-10-31 15:31 GMT

அமைச்சர் செந்தில்பாலாஜி.

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க. தலைமைக்கு நெருக்கமாக உள்ளார்.கோவை மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.கோவையில் தி.மு.க.வை பலப்படுத்துவதில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.இவருடைய முயற்சியால் கோவையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த பலர் தி.மு.க.வில்  இணைந்துள்ளனர்.இதனால் எதிர்க்கட்சியினர் தரப்பில் இவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து கட்சியில் முக்கிய இடத்தை பெற்றுள்ளார்.

கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பலரிடம் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக  அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்தனர். 

இந்த பண மோசடி  வழக்கு  சென்னையில் உள்ள  எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையே இந்த பண மோசடி  வழக்கின் அடிப்படையில், மத்திய அமலாக்கப்பிரிவினர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது தனியாக வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில்  தன் மீதான 3 வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

பணம் கொடுத்து ஏமாந்த புகார்தாரர்கள் சார்பில்  இந்த வழக்குகளை புதிதாக விசாரணை செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது. செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல்கள், அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். பணத்தை இழந்தவா்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், "  அரசு வேலை கிடைக்கும் என்று பல இஞைர்கள் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டனர். அதனால் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்தால்  கொடுத்த பணம் பறிபோய் விடும். எனவே இந்த வழக்குகளை ரத்து செய்யக்கூடாது. தொடர்ந்து விசாரிக்க  வேண்டும்" என்றனர். 

அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, "அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு அரசின் அதிகாரமிக்கவராக உள்ளார். அவர் மீதும், அவருடைய  நண்பர்கள் மீதும் உள்ள பண மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, அவர் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது" என்றார். அதேபோல்   போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் ராஜ் திலக் ஆஜரானார். அமைச்சர்  செந்தில் பாலாஜி மீதான புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இந்த வாதங்களை எல்லாம்  நீதிபதி கேட்டறிந்தார். பின்னர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்தார். அதோடு இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க  வேண்டும் என்று மத்திய அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான நிலுவையில் உள்ள இரண்டு முதல் தகவல் அறிக்கை மீது மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.  அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான புகார்களை மீண்டும் விசாரணை  நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருப்பது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Tags:    

Similar News