ஆந்திராவில் வேலைவாய்ப்பு வழங்க புதிய செயலி: சந்திரபாபு நாயுடு திட்டம்
ஆந்திராவில் வேலைவாய்ப்பு வழங்க புதிய செயலி உருவாக்கி உள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் ஸ்கில் சர்வே ஒன்றை நடத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் அவர் இந்தியாவுக்கே புதிய பாதை ஒன்றை வகுத்துக் காட்டியுள்ளார்.
இந்தியாவில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக 4ஆவது முறையாகப் பதவியேற்றுள்ளார். இதுவரை அவருக்கு முன்பாக இருந்த சவால்களைவிட இந்த முறை அதிக நெருக்கடிகள் அவர் முன்பாக உயர்ந்து கோபுரம்போல நிற்கின்றன. முதன்முறையாக அவர் 1995 ஆம் ஆண்டு முதலமைச்சரானார்.
அவரது முதல் ஆட்சிக்காலத்தில் அவரது மாமனார் என்.டி.ராமராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியைக் குறுக்குவழியில் கைப்பற்றிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆகவே, அந்த அவப்பெயரைத் துடைப்பதற்காக அதிகம் அவர் போராடினார். மாநிலத்தை ஐடி துறையில் சிறந்து விளங்கவைத்ததன் மூலம் திறமையான முதல்வர் என்று நல்ல பெயரைப் பெற்று, தன் மீது நிலவிய பழைய கெட்ட பெயரை துடைத்தார். அதன்பிறகு 1999ல் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார். அப்போது நாடு முழுவதும் கார்கில் போரை பாஜக சரியாகக் கையாண்டதற்கான அலை வீசியது. அந்த அலை ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக மாறியது.
மீண்டும் 2014இல் ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக முதல்வரான நாயுடு. புதிய மாநிலம் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது. புதிய மாநிலத்தைக் கட்டி எழுப்புவதற்காக நிறையவே போராடினார். ஆனால், அடுத்து 2019ல் வந்த தேர்தலில் தெலுங்கு தேசம் படுதோல்வியை அடைந்தது.
நடந்து முடிந்த 2024 சட்டசபைத் தேர்தலில் 135 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் 4ஆவது முறையாக இப்போது பதவியேற்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. இப்போது அவருக்குக் கிட்டத்தட்ட 75வயதாகிறது. ஆந்திர அரசியலில் 1978இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சட்டமன்றத்திற்கு முதன்முறையாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட நாயுடு, அதன்பின்னர் என்.டி.ராமராவ் கட்சியான தெலுங்கு தேசத்தில் இணைந்து 1989இல் சட்டமன்ற உறுப்பினரானவர் இறுதியில் 1995இல் தெலுங்கு தேசம் சார்பாக முதன்முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இவர் இத்தனை ஆண்டுகாலம் பொதுவாழ்விலிருந்தாலும், இந்த முறை அவர் பாதுகாப்பான வளையத்திற்குள் நின்று ஆட்சி அமைத்துள்ளார். காரணம், அவரை எதிர்க்க வலுவான எதிர்க்கட்சி இல்லை. 21 இடங்களைப் பெற்ற ஜனசேனா அமைச்சரவையில் பங்கு வகிக்கிறது. ஜெகன்மோகன் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதால், அவர் சட்டமன்றத்திற்குள் நுழைவதைத் தவிர்த்துவிட்டார். ஆகவே சந்திரபாபு நாயுடுவுக்கு இது பொன்னான காலம். இதை அவர் சரியாக தக்கவைத்துக் கொண்டால், அடுத்த 10 ஆண்டுகள் அவரது ஆட்சிதான். அதை உணர்ந்தே பல புதிய முயற்சிகளைக் கையில் எடுத்துள்ளார் நாயுடு.
அதாவது இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நாயுடு தனித் திட்டத்தைப் போட்டு இந்தியாவுக்கே புதிய வழியைக் காட்டியுள்ளார். நாயுடு தலைமையிலான அரசு ஆந்திராவில் வீடு வீடாகச் சென்று ஸ்கில் சர்வே எடுக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அதாவது திறன் கணக்கெடுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஏனெனில் ஜெகன்மோகன் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. தவறான அவரது கொள்கை முடிவால் பல பெரிய பெரிய நிறுவனங்கள் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டுக் கிடந்தன. ஆகவே, புதிய வேலைவாய்ப்புகள் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படவில்லை.
அதை முன்வைத்தே இந்தத் தேர்தலில் நாரா லோகேஷ் தனது பிரச்சார வியூகத்தைக் கட்டமைத்தார். அது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆகவேதான் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தத் திறன் கண்டறியும் சர்வேவை நடத்த நாயுடு உத்தரவிட்டுள்ளார். இதற்காக அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று, குடும்பத்தில் எத்தனை படித்தவர்கள் உள்ளனர்? என்ன படித்துள்ளனர்? படித்த வேலைக்கு ஏற்ப வேலை, ஊதியம் கிடைக்கிறதா? படித்துவிட்டு வேலை கிடைக்காமல் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன? என்று பல தகவல்களை எடுக்க உள்ளனர்.
யார் வேலையில்லாமல் இருக்கிறார்களோ அவரின் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளைக் கண்டறிய அரசாங்கம் நேரடியாக அவர்களுக்கு உதவும். ஒருவேளை அவர்கள் வேலையிலிருந்தாலும் குறைந்த சம்பளம் பெற்றால், திறமைக்கு ஏற்ப நல்ல ஊதியம் தரும் வேலைகளைக் கண்டறிந்து அரசாங்கம் தரும். எனவே மாநிலம் முழுவதும் உள்ள கிராம வார்டு, பஞ்சாயத்து ஊழியர்களை வைத்து இந்தக் கணக்கெடுப்பை அரசு நடத்த உள்ளது. இதற்காக தனி ஆப் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது.
அரசின் அறிக்கையின்படி, சுமார் 15 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். எனவே இந்த விவரங்களைச் சேகரிக்க உள்ளது. இளைஞர்களின் திறன்களை மதிப்பிடுவதற்கு ஆன்லைன் தேர்வுகளை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக Sector Skill Councils (SSCs) உதவியை நாட அரசு முடிவுசெய்துள்ளது. இந்தக் கணக்கெடுப்புப் பணி முடிவடைய மூன்று மாதங்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் ஒரு திட்டம் போடப்படும். கூடுதலாக மற்றொரு பக்கம் கல்லூரியில் படிக்கும் போதே மாணவர்களின் திறனை மேம்படுத்தப் பல தொழில் நிறுவனங்களின் உதவியை அரசு நாட உள்ளது. அதன்மூலம் படிக்கும் போது தொழில் நிறுவனத்திற்குத் தேவைப்படும் பணியாளர்களை அரசு உருவாக்கவும் புதிய திட்டம் ஒன்றை வகுத்து வருகிறது.