என்டிஏ கூட்டணி தலைவராக மோடி தேர்வு: 3வது முறையாக பிரதமராவது உறுதியானது

என்டிஏ கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் அவர் 3வது முறையாக பிரதமராவது உறுதியாகி உள்ளது.

Update: 2024-06-05 15:30 GMT

தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி ஆகிவிட்டது.

உலகின் முதலாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்தார். ஆனால் இப்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

240 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி இந்தியா முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 272 தொகுதிகள் வேண்டும். ஆனால் பாரதிய ஜனதாவால் அந்த வெற்றியை எட்ட முடியவில்லை. அதே நேரத்தில் பாரதிய ஜனதா தலைமை தாங்கிய தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு 296 இடங்கள் கிடைத்துள்ளன. அதனால் அவர்கள் ஆட்சி அமைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு 231 இடங்கள் மட்டுமே கிடைத்தன. காங்கிரஸ் கட்சி மட்டும் தனிப்பட்ட முறையில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி உள்ளது. ஆதலால் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழல்தான் உள்ளது.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் முக்கிய அங்கத்தினர்களாக உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ் குமார் ஜனசேனா  கட்சி தலைவர் பவன் கல்யாண், சிவசேனா கட்சி (ஷிண்டே)தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும், பிரதமர் மோடிக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பிரதமர் மோடி தேசிய ஜனநாயக முன்னணி (என் டி ஏ )கூட்டணி தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை அமைப்பது உறுதி ஆகிவிட்டது. பாரதிய ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி பதினாறு இடங்களில் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா ஷிண்டே பிரிவு மற்றும் லோக் ஜனசக்தி  ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் பாரதிய ஜனதா ஆட்சியமைப்பதில் உள்ள சிக்கல்கள் தீ்ர்ந்து உள்ளன.

ஆனால் போகப் போக கூட்டணி கட்சிகளின் ஆதரவு எந்த நிலையில் இருக்கும் என்பதை சொல்ல முடியாது. ஏனென்றால் எதிர்கட்சி கூட்டணியும் வலுவாக உள்ளது. கடந்த இரண்டு அமைச்சரவையின் போது பாரதிய ஜனதா எடுத்த முடிவுகள் தன்னிச்சையாக இருந்தன. ஆனால் இனி கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல் எந்த ஒரு முடிவையும் பாரதிய ஜனதாவால் தன்னிச்சையாக எடுக்க முடியாது என்கிற ஒரு சூழல்தான் உள்ளது.

Tags:    

Similar News