வைகோவின் தமிழ் இனப் பற்றுக்கு சான்றிதழ் தேவை இல்லை.. மதிமுக பரபரப்பு அறிக்கை…
ஈழத்தமிழர் நலனுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்த வைகோவுக்கு சான்றிதழ் தேவை இல்லை என மதிமுக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஈழப்பிரச்னை, ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதுகுறித்து மதிமுக துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:
தனியார் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணல் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கின்றது. ஈழப்பிரச்னை குறித்து திருமாவளவன் தெரிவித்து இருக்கும் கருத்துகள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும் மதிமுகவினர் மட்டுமின்றி தமிழ் உணர்வாளர்களுக்கும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஈழத்தமிழ் மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் வைகோ என்பதை பூமிப்பந்தில் வாழும் பத்துக் கோடித் தமிழர்களும் நன்கு அறிவார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி 1981 ஆம் ஆண்டில் இருந்து வீரமுழக்கமிட்டு வருபவர் வைகோ.
விடுதலைப் புலிகளை ஆதரித்ததால் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பல இழப்புகளை சந்தித்தவர் வைகோ என்பதை மறுக்க முடியாது. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 577 நாட்கள் வேலூர் சிறையில் வாடியவர் வைகோ. பொத்தம் பொதுவாக தமிழ்நாட்டு தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்னையில் அரசியல் செய்தார்கள் என்று திருமாவளவன் குறிப்பிடுவது வேதனை தருகிறது.
ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது ஆட்சியில் இருந்த மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டனம் செய்தவர் வைகோ. இதனை இப்போது நேர்காணலில் குறிப்பிட்டு, வைகோ மீது புழுதி வாரித் தூற்றுவது எந்த நோக்கத்தில்? என தெரியவில்லை.
முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் இன்றைய உலகச் சூழலில் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு ஒன்றேத் தீர்வு என பெல்ஜியம் மாநாட்டில் முதன் முதலில் முன்வைத்த வைகோ இன்றும் அந்த லட்சியத்துடன் செயலாற்றி வருகிறார். பார்வதி அம்மாளை மருத்துவ சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து உரிய அனுமதி பெற்று சென்னைக்கு அனுப்பி வைத்தார் சிவாஜிலிங்கம். இதிலும் வைகோ அவர்கள் மீது வீண் பழி போடுவது எதற்காக?.
கடந்த 1989 ஆம் ஆண்டு பிரபாகரனை வைகோ சந்தித்தது தொடர்பாக, பிரபாகரன் தனது கைப்பட அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதிக் கொடுத்து அனுப்பி இருந்தார். அதில், “வைகோ தனது உயிரையும் பொருட்படுத்தாது எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் அடர்ந்த கானகத்தின் நடுவே என்னையும், எனது சக தோழர்களையும் சந்தித்திப் பேச வைத்துள்ள துணிச்சலையும் தமிழ்ப்பற்றையும் பார்க்கும்போது நான் எனது மொழிக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் இன்னும் ஆயிரம் தடவை இறக்கலாம் என்னும் மனத்தென்பே ஏற்படுகிறது” என்று பிரபாகரன் குறிப்பிட்டு இருந்தார்.
இதை விட வேறு எவரிடம் இருந்தும் வைகோவின் தமிழ் இனப் பற்றுக்கு சான்றிதழ் தேவை இல்லை. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரைப்பற்றி பேசத் தொடங்கினால் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் நோக்கம் தடம் புரண்டு விடும். இந்துத்துவ சனாதன சக்திகளை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியதுதான் தற்போதைய முகாமையான சிந்தனை,குறிக்கோளாக இருக்க வேண்டும் என அறிக்கையில் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.