7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர்

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதா ராமகிருஷ்ணன் கடந்த 7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கே தாக்கல் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது;

Update: 2024-03-29 04:35 GMT

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா 

தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், முதற்கட்டமாக 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. தொடர்ந்து திருநெல்வேலி தொகுதிக்கு ராபர்ட் ப்ரூஸ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு கடைசி கட்டத்தில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சுதா ராமகிருஷ்ணன் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

திருவள்ளுவர் மாவட்ட கும்மிடிப்பூண்டி சேர்ந்தவர் 45 வயதான சுதா ராமகிருஷ்ணன். வழக்கறிஞரான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2020 -ஆம் ஆண்டுமுதல் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் ராகுல் காந்தியுடன் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் நடந்து சென்றுள்ளார்.

மயிலாடுதுறை தொகுதியில் 11 முறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக சொல்லப்பட்டாலும், தற்போது தொகுதிக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு நபரை அறிவித்திருப்பதும், திமுக கூட்டணியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் என்பதால் தொடர்ந்து சொந்த கட்சிக்காக பணி செய்யாமல் கூட்டணி கட்சிகாகவே வேலை செய்யும் சூழல் உள்ளதால் திமுகவினரும் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் இம்முறை மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி என்பது சற்று கடினமானது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளான புதன்கிழமை மதியம் வேட்பு மனுத் தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.சுதா. தான் தாக்கல் செய்த வேட்புமனுவில் கடந்த 7 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பொது பார்வையாளர் கண்ஹூர் ராஜ் ஹச் பகதே மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

அப்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவின் வேட்பு மனு பரிசீலனையின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் எதிர்ப்பு தெரிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் கொடுத்துள்ள உறுதிமொழி பிரமாண பத்திரத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை எனவும், அவருடைய வங்கி கணக்கில் 11 லட்சம் ரூபாய்க்கு மேல் இருப்பு இருப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தபோதிலும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவின் மனு ஏற்கப்பட்டதால், அங்கிருந்து வெளிநடப்பு செய்தார். மேலும் இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது வேட்பு மனுவில் கடைசி 5 ஆண்டுகளில் தான் ஈட்டிய வருமானம் குறித்து வருமான வரி தாக்கல் செய்த விவரத்தை குறிப்பிட வேண்டும். கடந்த 2016-2017 -ஆம் நிதியாண்டில் கடைசியாக இவர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆண்டு வருமானம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 080 ரூபாய் என கணக்கு காட்டியுள்ளார். அதன் பிறகு அவர் வருமான வரி தாக்கல் செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News