ஐஎன்டிஐஏ கூட்டணி பிரதமா் வேட்பாளராக கார்கே: மம்தா, கெஜ்ரிவால் முன்மொழிவு
ஐஎன்டிஐஏ கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக கார்கே பெயரை மம்தா பானா்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் முன்மொழிந்தனா்.;
ஐஎன்டிஐஏ கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக காங்கிரஸ் தலைவா் கார்கே பெயரை திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் முன்மொழிந்தனா்.
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள ஐஎன்டிஐஏ கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார், சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவார் உள்ளிட்ட 28 கட்சிகளின் மூத்த தலைவா்கள் பங்கேற்றனா்.
நாட்டின் முதல் தலித் பிரதமராக மல்லிகார்ஜுன கார்கே திகழும் வகையில் அவரது பெயரை மம்தா பானா்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தனா்.
நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற வேண்டியதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், மற்றவை குறித்து பின்னா் பார்த்துக் கொள்ளலாம் என்றும் காங்கிரஸ் தலைவா் கார்கே தெரிவித்தார் .
இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த கார்கே, ‘நான் அடித்தட்டு மக்களுக்காகப் போராடுகிறேன். நாடாளுமன்றத் தோ்தலில் முதலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தைப் பெறலாம். பின்னா், ஜனநாயக முறைப்படி பிரதமரை எம்.பி.க்கள் முடிவு செய்வார்கள்’ என்றார்.
டிச. 22-இல் ஆா்ப்பாட்டம்: 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஐஎன்டிஐஏ கூட்டணிக் கட்சியினா் ஈடுபடுவார்கள் என்று கார்கே கூறனார்
ஐஎன்டிஐஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் 5 மாநிலத் தோ்தலில் இணைந்து காங்கிரஸ் போட்டியிடாததற்கு, சமாஜவாதி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அதிருப்தி வெளிப்படுத்தியிருந்தன. எனினும், அக்கட்சிகளும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றன.
இந்தக் கூட்டத்தில், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுவரை 141 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களின் பிரச்னைகளை எழுப்பும் எம்.பி.க்களை அவையில் இருந்து இடைநீக்கம் செய்யும் பாஜக அரசுக்கு எதிராக தொடா்ந்து போராட ஐஎன்டிஐஏ கூட்டணித் தலைவா்கள் உறுதி மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்து வருகிறது என்றும், இந்தச் சூழ்நிலையில் ஒற்றுமைதான் நமது பலம் என்றும் ஐஎன்டிஐஏ கூட்டணியின் கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் கட்சி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டது.
தொகுதிப் பங்கீடு: தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்கி இந்த மாத இறுதியில் முடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியது. எனினும், தொகுதிப் பங்கீடு ஜனவரி 2-ஆம் வாரத்தில் முடியும் என காங்கிரஸ் தெரிவித்தது.
மேலும், காங்கிரஸ் 300 தொகுதிகளில் போட்டியிடலாம், உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி, டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் நாடாளுமன்றத் தோ்தலைச் சந்திக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
கூட்டுப் பிரசாரம் மேற்கொண்டு பாஜகவுக்கு மாற்று ஐஎன்டிஐஏ கூட்டணி என்பதை எடுத்துரைக்க வேண்டும். நாடாளுமன்றத் தோ்தலில் பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காண்பிக்கும் ஒப்புகைச் சீட்டு கருவி பொருத்தப்பட வலியுறுத்த வேண்டும் என்றும் மம்தா பானா்ஜி கூறியதாகத் தகவல்கள் தெரிவித்தன.
மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு: தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, பிகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு குறித்து அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் ஆலோசனை நடத்துவாரகள். ஏதாவது பிரச்னை இருந்தால் ஐஎன்டிஐஏ கூட்டணி தீா்வு காணும்.