கடும் அப்செட்டில் மநீம! திமுக தரப்பில் அமைதியோ அமைதி..!
கமல்ஹாசனுக்கு திமுக தரப்பிலிருந்து அழைப்பு வரும் வரும் என காத்திருந்து காத்திருந்து ஒவ்வொரு நாளும் கடந்து வருகின்றன. இதனால் கடுமையான அப்செட்டில் இருக்கிறார்களாம் மய்யத்தினர்.;
ஷூட்டிங் கேன்சல் செய்துவிட்டு சென்னையிலேயே தங்கியிருக்கும் கமல்ஹாசனுக்கு திமுக தரப்பிலிருந்து அழைப்பு வரும் வரும் என காத்திருந்து காத்திருந்து ஒவ்வொரு நாளும் கடந்து வருகின்றன. இதனால் கடுமையான அப்செட்டில் இருக்கிறார்களாம் மய்யத்தினர்.
மக்கள் நீதி மய்யம், நடிகர் கமல்ஹாசன் தலைமையில் தமிழகத்தில் திராவிட சித்தாந்தத்தோடு உதயமான கட்சி. ஆரம்பம் முதலே பரபரப்பாக திமுக, அதிமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என களமிறங்கி பல விசயங்களைச் செய்தார்கள். கமல்ஹாசனின் முகத்துக்காக அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டமும் சென்றது. இப்படி மக்கள் தொடர்ந்து வரவேற்பைத் தந்து வருவதால் 2026 ம் ஆண்டு தேர்தலில் நிச்சயம் மக்கள் ஆதரவில் 3வது பெரிய கட்சியாக வளர்ந்து நிற்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த சில ஆண்டுகளாக கமல்ஹாசன் திமுக தரப்புடன் நெருக்கம் காட்டத் தொடங்கினார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து இந்த தேர்தலில் களமிறங்குவார் என்றும், காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருப்பதால் சர்ச்சை எழுந்தாலும், பாஜகவை எதிர்கொள்ள அனைத்து தரப்பும் ஒன்று சேர வேண்டும் என்று ஆறுதல் படுத்திக்கொண்டு களமிறங்கினர். மக்களவைத் தேர்தல் 2024ம் நெருங்கியது. ஒவ்வொரு கட்சியில் அதற்கேற்ப வியூகங்களை வகுக்கத் தொடங்கியது.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் ஆதரவு தெரிவிப்பார்கள். அவர்களுக்கு 6 சீட்கள் வரை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் பேச்சுவார்த்தையில் கமல்ஹாசன் பங்கேற்காமல், இருந்தது மய்யத் தொண்டர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகிப் போனது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மறைமுகமாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதனுடன் 2 சீட்கள் வரை ஒப்பந்தம் போடப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கடைசியில், ஒரு சீட் கூட கொடுக்கப்படாமல், திமுக ஏமாற்றியதாக உணர்ந்தனர் மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள். இப்படி நிறைய இடிகளைத் தாங்கி கமல்ஹாசன் முகத்துக்காக கட்சியில் எஞ்சியிருக்கும் தொண்டர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் செய்தியாக, கமல்ஹாசனை பிரச்சாரத்தில் பங்கேற்க கூட இதுவரை எந்த அழைப்பும் விடுக்கவில்லை என்பது அமைந்துள்ளது.
கமல்ஹாசன் தனது தக் லைஃப் பட ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு இந்த தேர்தலுக்காக கடந்த 3 வாரங்களாக சென்னையில் இருக்கிறார். இதுவரை அரசியல் சம்பந்தமாக எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்கவில்லை. மும்பையில் ராகுல்காந்தி பங்கேற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் கமல்ஹாசன் அழைக்கப்படவில்லை. இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் அமைதியாக இருக்கின்றனர்.
கட்சியின் தலைமைக் குழு சில தினங்களுக்கு முன்னர் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு வாய்மொழி உத்தரவு வழங்கியிருக்கிறது. கமல்ஹாசன் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கும், தெருப் பிரச்சாரங்களுக்கும் அந்தந்த பகுதிகளில் அனுமதி பெற்று வைக்குமாறும், கூட்டத்துக்கு ஆள் சேர்க்குமாறும் உத்தரவிட்ட நிலையில், ஆள் சேர்க்க யாரும் முன் வரவில்லையாம். கட்சியில் யார் இருக்கிறார் எப்படி ஆட்களைச் சேர்ப்பது. நேரடியாக திமுகவிடமே ஆள் சேர்க்க சொல்லவேண்டியதுதானே என திரும்பி கேள்விகள் வருவதால் அதிர்ச்சியடைந்துள்ளது தலைமை.
திமுகவுடன் சேர்ந்துவிட்ட நிலையில், அடுத்த 2026 தேர்தலுக்கு என்ன சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பீர்கள் என சொந்த கட்சி தொண்டர்களே கேட்பதால் திக்கு தெரியாமல் நிற்கிறார்கள் மய்யத்தினர்.