தொடர்மழை, ஒமிக்ரான் அச்சுறுத்தல்... தள்ளிப்போகிறதா உள்ளாட்சி தேர்தல்?
தமிழகத்தில் பெய்து வரும் மழை, ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.;
தமிழகத்தில், 2016ம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில், அது தள்ளிப்போனது. பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2019ம் ஆண்டில், 9 மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில், ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. விடுபட்ட மாவட்ட ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு, அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது.
இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து தற்போது விருப்ப மனுவை பெற்று வருகின்றன. டிசம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போகலாம் என்று தகவல் கசிந்துள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையாலும், ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்த அச்சம் உள்ளிட்ட காரணங்களால், தமிழக அரசு இம்முடிவுக்கு வந்திருப்பதாக, உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது. மார்ச் அல்லது மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.