தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-19 14:48 GMT

எடப்பாடி பழனிசாமி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களை தவிர மேலும் அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டியுள்ளேன். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராய மரணங்கள் என வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு் சென்ற சசிகலா கடந்த, 3 ஆண்டுகளாக எங்கிருந்தார்?. இத்தனை நாள் கட்சியை காப்பாற்றியது சசிகலாவா?.

இதென்ன.. வேலை வேண்டாம் என்று ரிட்டயர் ஆகி விட்டு, மீண்டும் வந்து வேலைக்கு சேர்ந்து கொள்ளும் விஷயமா.. அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக தொண்டர் தான் கட்சியை காப்பாற்றி உள்ளனர்.

ஜெயலலிதா தனி அணியாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது, ஜானகி அணியில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு தலைமை தேர்தல் ஏஜெண்டாக இருந்தவர் ஓபிஎஸ். அவர், அப்போது இருந்தே ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இல்லை.

அதிமுகவிற்கும் விசுவாசமாக இல்லை. எப்போதும் அவர் சுயநலமாக தான் இருந்துள்ளார். எனது தலைமையில் நடந்த அதிமுக ஆட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தவர் ஓபிஎஸ்.

தற்போது, ராமநாதபுரத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டவர் ஓபிஎஸ்.

தொடர்ந்து அதிமுகவிற்கு துரோகம் செய்து வரும் ஓபிஎஸ்சை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்?. கட்சிக்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ்சின் நிலை தான் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News