ஸ்டாலின் 'அப்படி' செய்தது துரதிருஷ்டவசமானது: கே.எஸ்.அழகிரி ஆதங்கம்
ஏற்கனவே தொடங்கி வைத்த திட்டங்களை மீண்டும் தொடங்கி வைத்த ஒரே பிரதமர் மோடிதான் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியதாவது:
பிரதமர் நரேந்திரமோடி, சென்னையில் சில திட்டங்களை தொடங்கி வைத்தார். ஆனால் அவை ஏற்கனவே தொடங்கி வைத்த திட்டங்கள். முன்புள்ள திட்டங்களை மீண்டும் தொடங்கி வைத்த ஒரே பிரதமர் மோடிதான். சென்னை துறைமுகம்- மதுரவாயல் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மீண்டும் தொடக்க விழா என்பது ஏற்புடையது அல்ல. எண்ணூரில் எரிவாயு முனையம் ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னையில் பிரதமர் பங்கேற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பெருத்தன்மையுடன் சென்று உள்ளார். ஆனால் பிரதமர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கக் கூடாது. பிரதமரின் சுற்றுப்பயணத்தை, தெலுங்கானா முதலமைச்சர் புறக்கணித்தார். ஆனால், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் நடந்த பிரதமர் விழாவில் கலந்து கொண்டது துர்திஷ்டவசமானது.
ஒரு மாநிலத்தின் தேவையை, விழாவின்போது கேட்க, முதலமைச்சருக்கு அருகதை, உரிமை இல்லையா. தேவைகளை கேட்டதை தவறு என்று சொல்வது பாஜகவின் அடிமை உணர்வாகும். இவ்வாறு, கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.