முதுகெலும்பு இல்லாத காங்கிரஸ்: பேரறிவாளவன் விவகாரத்தில் குஷ்பு சாடல்
பேரறிவாளன் விவகாரத்தில் திமுக உடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சியால் முறித்துக் கொள்ள முடியுமா என்று, பாஜகவில் உள்ள நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனை நேரடியாக கண்டிக்காத காங்கிரஸ் கட்சி, தீர்ப்புக்கு அதிருப்தியை தெரிவித்து, இன்று அறவழி போராட்டத்தை நடத்தியது.
அத்துடன், இந்த விவகாரத்தில் மத்தியில் உள்ள பாஜகவை, காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதே நேரம், பேரறிவாளனின் விடுதலையை ஆதரித்து வரும், தனது கூட்டணி கட்சியான திமுகவிடம்,இதுகுறித்து காங்கிரஸ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், "விடுதலையான பேரறிவாளனை, முதலமைச்சர் கட்டி அணைக்கிறார்.
ஆனால் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தி.மு.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? முதலமைச்சரின் செயலை உங்களால் (காங்கிரஸ்) கண்டிக்க முடியுமா? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.