நாணயம் மூலம் மத்தியில் பாஜக உறவை மீண்டும் புதுப்பிக்க உதவிய கருணாநிதி

நாணயம் மூலம் மத்தியில் பாஜக உறவை மீண்டும் புதுப்பிக்க மறைந்த பின்னரும் கருணாநிதி உதவி இருக்கிறார் என கணிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-08-25 15:00 GMT

முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய்க்கு சால்வை அணிவித்த அப்போதைய முதல்வர் கருணாநிதி (கோப்பு படம்)

நாணயம் வெளியீட்டு விழா மூலம் மத்தியில் பாஜக உடனான உறவை திமுக மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கு மறைந்த பின்னரும் கருணாநிதி தனது மகனுக்கு உதவி உள்ளார்.

மறைந்த திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி நினைவு நாணயம் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த  19ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நாணயத்தை வெளியிட்டவர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங். மோடி தலைமையிலான பாஜக அரசின் மூன்றாவது இடத்தில் இருக்கும் மிக சக்தி வாய்ந்த நபர். ஆட்சியில் மட்டுமின்றி கட்சியிலும் அவருக்கு என ஒரு தனி செல்வாக்கு உண்டு.

பாஜக தலைமையிலான ஆட்சி பற்றியும் பிரதமர் மோடி பற்றியும் முதல்வர் ஸ்டாலின் பல ஆண்டுகளாக எதிர் அரசியல் பண்ணி வருகிறார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது மோடி தமிழ்நாட்டுக்குள் வரக்கூடாது என்பதற்காக கோ பேக் மோடி என பலூன் பறக்க விட்டவர்கள் திமுகவினர். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னரும் அவரது எதிர்ப்பு மனப்பான்மை நீங்கவில்லை.

தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம், நீட் தேர்வில் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கவில்லை, சனாதனம் பேசி வரும் கவர்னர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை  என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கையே முதல்வர் ஸ்டாலின் கடைபிடித்து வந்தார். கவர்னர் ஆர் என் ரவி மீதும் அவ்வப்போது டெல்லிக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன.


இப்படி எதிர்ப்பு மனப்பான்மையில் இருந்த திமுக திடீரென கருணாநிதி நாணயம் வெளியிட்டு விழாவிற்கு மத்திய அமைச்சரை அழைத்ததும் அவர் வந்து விழாவில் கலந்து கொண்டதும் தான் மிகப்பெரிய அரசியல் திருப்புமுனையாக தமிழகத்தில் அமைந்துள்ளது. கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டதில் ஒன்றும் தவறில்லை. இந்திய அளவில் மிகப்பெரிய மூத்த அரசியல் தலைவர் கருணாநிதிக்கு நாணயம் வெளியிடும் அளவிற்கு அவர் ஒரு சிறப்பு வாய்ந்த தலைவர் தான். இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆனால் பாரதிய ஜனதா கட்சி சார்பிலோ அல்லது மத்திய அரசு சார்பிலோ முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு கூட இதுவரை நாணயம் வெளியிடப்படவில்லை. இப்படி இன்னும் பல தலைவர்கள் நாணயம் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் திமுக அழைத்தார்கள் என்பதற்காக உடனடியாக நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் கருணாநிதியை வல்லவர் நல்லவர் என வானளாவ புகழ்ந்து பேசியதும் அவரது நினைவிடத்திற்கு நேரடியாக சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதும் தான் பல கேள்விகளை அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.


தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் தான் ஆட்சியில் உள்ளன. திமுக ,அண்ணா திமுக என்ற இந்த இரண்டு கட்சிகளுமே பாரதிய ஜனதா கட்சியுடன் ஒரு காலத்தில் கூட்டணி வைத்தவர்கள் தான். தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு முதலில்  கதவு திறந்து விட்டவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா தான். கடந்த  1998 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தார். அப்போது மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்தது. வாஜ்பாய் பிரதமர் ஆனார் .ஆனால் அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த ஆட்சியை ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்த்ததும் ஜெயலலிதா தான்.

இதனை தொடர்ந்து 1999ம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது பாரதிய ஜனதா. அதன் பின்னர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா ஆட்சிக்கு திமுக ஆதரவு கொடுத்தது. அதுவரை பாரதிய ஜனதா அரசை பண்டாரம், பரதேசிகள் என விமர்சித்து வந்த கருணாநிதி தனது மருமகன் முரசொலி மாறனின் ஆலோசனைப்படி ஆதரவு தெரிவித்தார். அதற்கு புது விளக்கமும் கொடுத்தார். திமுக தயவில் வாஜ்பாய் அரசு கூட்டணி மந்திரி சபை மீண்டும் அமைந்தது.

இப்படி திமுக அதிமுக என இரண்டு கட்சிகளுமே பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இது கடந்த கால வரலாறு. அதிமுக கூட ஆதரவு தெரிவித்ததோடு சரி அமைச்சரவையில் பங்கேற்கவில்லை. ஆனால் திமுகவோ முக்கியமான இலாகாக்களை கேட்டு வாங்கி அமைச்சரவையில் பங்கு வகித்தது.

இந்த சூழலில் தான் தற்போது இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுகவும் அதன் தலைவர் ஸ்டாலினும் நாணய வெளியீட்டு விழாவிற்கு இந்தியா கூட்டணியின் தலைவர் ஆன ராகுல் காந்தியையோ அல்லது மல்லிகார்ஜுன் கார்கேவை கூட அழைக்காமல்  பாரதிய ஜனதா பக்கம் திரும்பி இருப்பது மிகப்பெரிய திருப்புமணியை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மத்தியில் தற்போது மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாரதிய ஜனதாவிற்கு தனி பெரும்பான்மை இல்லை .முக்கிய கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவுடன் தான் இந்த அமைச்சரவை நீடித்து வருகிறது. அவர்களுடன் ஏதாவது கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டால் திமுகவின் ஆதரவை எளிதாக பெற்று விடலாம் என்கிற ஒரு மனப்போக்கு காரணமாகவும் மத்திய அரசு இறங்கி வந்திருப்பதாக கூறப்படுகிறது .


அதே நேரத்தில் திமுகவும் மத்திய அரசிடம் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் நிதி பெறுவதில் சிக்கல் ஏற்படுவதால் எம் ஜி ஆர் பாலிசியில் அனுசரித்து செல்வது என்று சமாதானமாக செல்ல முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. அரசியலில் எப்பொழுது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற அடிப்படையில் தற்போதைய காட்சிகள் மாறிக்கொண்டே வருகின்றன. அதில் ஒன்றுதான் இந்த நாணயம் வெளியீட்டு விழாவும். எது எப்படியோ நாணயம் வெளியிட்டு விழாவின் மூலம் பாரதிய ஜனதாவுடனான உறவை திமுக மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பை கருணாநிதி மறைந்த பின்னரும் நாணயம் வடிவில்  ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News