விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிரொலிக்க போகும் கள்ளக்குறிச்சி சம்பவம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்கள் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-06-23 14:50 GMT

கள்ளக்குறிச்சி கள்ள சாராய உயிரிழப்புகள் நிச்சயமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடி இருக்கிறார்கள். இந்த வெற்றி விழாவை கொண்டாடிக்கொண்டு இருக்கும் காலகட்டத்திலேயே கரும்புள்ளி வைப்பது போல் கள்ளக்குறிச்சி கள்ள சாராய  உயிரிழப்புகள் நடந்து இருக்கின்றன.

இந்த நேரத்தில் தான் தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவு அனைவராலும்  எதிர்பார்க்கப்படும் ஒன்றாக உள்ளது.

இந்த தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை நிறுத்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பிலும்  வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருக்கிறார். ஆக மும்மனை போட்டி தான் அங்கு உள்ளது. இந்த தேர்தலை அதிமுக  புறக்கணித்து விட்டதாக அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதாவது ஆளுங்கட்சியின் பணபலம், அராஜகம் ஆகியவற்றின் காரணமாக தாங்கள் புறக்கணிப்பதாக அதிமுக சார்பில் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி துணிந்து வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து இருந்தாலும் அக்கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் திமுகவிற்கு பாடம் கற்பிப்பதற்காக பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தால் ஏற்கனவே அங்கு வலுவான நிலையில் உள்ள பாமக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

இந்த சூழலில் தான் கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரண விவகாரம் இந்த தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என கருதப்படுகிறது. ஏனென்றால் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கு இதுவரை திமுகவும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களும் ஆறுதல்  சொல்லக்கூட  வரவில்லை .இது நிச்சயமாக விக்கிரவாண்டி தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலத்தில் நடந்த பல சட்டமன்ற தேர்தலிலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்று இருக்கலாம். ஒரு சில தேர்தல்களில் எதிர்க்கட்சிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. சென்னை ஆர் கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியை தழுவியது. ஆனால் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் அந்த தேர்தலில் அன்று எதிர்க்கட்சியாக இருந்த  திமுக டெபாசிட் இழந்தது. அதேபோன்ற ஒரு நிலைதான் இந்த தேர்தலிலும் ஏற்படும் என்று கருதுகிறார்கள்.

ஏனென்றால் கள்ளக்குறிச்சி சம்பவம் நிச்சயம் மாவட்ட மக்களின் நெஞ்சத்தில் ஒரு கொடுமையான விளைவை ஏற்படுத்தி இருக்கிறது கள்ளச்சாராய மரணத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது தாழ்த்தப்பட்ட மக்கள் தான். தாழ்த்தப்பட்டவர்களுக்காகவே வாழ்வதாக கூறும்  தலைவர்கள் கூட அவர்களுக்கு ஆறுதல் கூற இதுவரை வராதது பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

எனவே நிச்சயமாக இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு மக்கள் ஒரு பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Tags:    

Similar News