அமலாக்க துறை மீது புகார் அளித்துள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

அமலாக்க துறை மீது ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-01-31 14:28 GMT
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி போலீசில் புகாரளித்து இருக்கிறார் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன்.

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருப்பவர் ஹேமந்த் சோரன். இந்தியா கூட்டணியில் இடம்பெற்று உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்து வரும் இவர் கடந்த பல மாதங்களாக அமலாக்கத்துறையின் குறியில் இருந்து வருகிறார். அவர் மீது சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த மாதம் வரை ஒரு முறை கூட அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் கடைசி சம்மனுக்கு அவர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் எந்த நேரத்திலும் அமலாக்கத்துறை இவரை கைது செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக தனது முதலமைச்சர் அவர் பதவியை ராஜினாமா செய்து தனது மனைவி கல்பனாவை முதலமைச்சராக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அண்மையில் கூட ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஹேமந்த் சோரன் ஆஜராகாத நிலையில் ஒரு நாளுக்கு மேலாக டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். இந்த கைதுக்கு அஞ்சி ஹேமந்த் சோரன் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அவர் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியதாக புகைப்படங்கள் வெளியாகின. இன்றும் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் கைது செய்யப்பட்லாம் என்ற பேச்சு உள்ளது. இதனால் ஜார்க்கண்ட் அரசியலில் பதற்றமான நிலை தொடர்ந்து வருகிறது. ராஞ்சியில் 144 தடை போடப்பட்டு உள்ளது. 7000 க்கும் அதிகமான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் புதிய செக் ஒன்றை அமலாக்கத்துறைக்கு வைத்து உள்ளார் ஹேமந்த் சோரன்.

ஆம், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி போலீசில் புகாரளித்து இருக்கிறார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செயல்பட்டதாகவும், எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி டெல்லியில் உள்ள முதலமைச்சர் இல்லத்துக்கு வந்ததாகவும், அவர் மீது பொய்யான தகவலை பரப்பியதாகவும் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சந்தன் சின்ஹா தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News