தேர்தலை எதிர்த்து கோர்ட்டுக்கு போவோம்: அதிமுக ஜெயக்குமார் எச்சரிக்கை

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்காவிட்டால் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும் என, திமுகவிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2022-02-16 08:24 GMT

தேர்தல் பிரசாரத்தின் போது, டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த ஜெயக்குமார். 

சென்னை ஓட்டேரி பகுதியில்,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தலில் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக அலை வீசிவருகிறது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியமிக்க ஒரு கட்சி. ஆனால் தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு குரல் கொடுப்பதை விடுத்து மற்ற கருத்துகளை, அக்கட்சியினர்  கூறி வருகிறார்கள். வாங்கிய பணத்திற்காக திமுகவிற்கு முத்தரசன் வக்காலத்து வாங்கி வருகிறார்.

திமுகவினர், வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, நிறைவேற்றினார்களா? தோல்வி பயத்தால் தான் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்து வருகிறார். தேர்தல் முடிந்தவுடன் மார்ச் மாதம் 1000 ரூபாய் வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி 8 மாத தொகையுடன் சேர்த்து 9 ஆயிரமாக வழங்க வேண்டும். திராணி, தெம்பு இருந்தால் இதை இன்றே முதல்வர் அறிவிப்பாரா?

சேப்பாக்கம் சேக்குவேராவிடம் (உதயநிதி), செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். திராவிட மாடல் குறித்து திமுக பேசக்கூடாது. திமுக குடும்பம் மற்றும் கட்சிகாரர்கள் லஞ்சத்தில் பெற்ற பணத்தை சமமாக பிரித்துக் கொள்கின்றனர். ஆறுமுகசாமி ஆணையத்தை பொருத்தவரை,  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு;  எங்களின் நிலைப்பாடு.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநில தேர்தல் ஆணையத்தின் மீதும், காவல்துறையின் மீதும் நம்பிக்கை இல்லை. துணை இராணுவத்தை வைத்து தேர்தல் நடத்த வேண்டும்.  தேர்தலில் திமுகவினர்  தேர்தல் விதிகளை மீறும் பட்சத்தில், இது தொடர்பாக  நீதிமன்றம் செல்லவும் அதிமுக தயங்காது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Tags:    

Similar News