ஆளுநர் ஆர்.என்.ரவியின் மனைவியை ‘லேடி கவர்னர்’ என்பதா? வி.சி.க. கண்டனம்

ஆளுநர் ஆர்.என்.ரவியின் மனைவியை ‘லேடி கவர்னர்’ என்பதா? என கேட்டு ஆளுநர் மாளிகைக்கு வி.சி.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2024-01-16 13:41 GMT

மனைவி லட்சுமியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்பு படம்).

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளை வெளியிடும் ராஜ்பவன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்க பதிவுகளில் அவரது மனைவி திருமதி லட்சுமி ரவி அவர்களை "லேடி கவர்னர்" என குறிப்பிடுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்து சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக வன்னி அரசு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மக்களாட்சி கோட்பாடு அடிப்படையில் ஆளுனர் என்பதே தேவையில்லாத ஒரு பதவி என பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்புகளும் விவாதங்களும் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளுனர் எதிர்ப்பு என்பது கடவுள் எதிர்ப்பை போலவே கோட்பாட்டு வலிமையாகவே தொடர்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு ஆளுநர் பணி செய்வதற்காக நியமிக்கப்பட்ட திரு.ரவி அவர்கள், வந்த வேலையை மறந்து விட்டு அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். சனாதனம்,குழந்தை திருமணம் குறித்து பெருமை படுவது, ராம ராஜ்யம் அமைப்போம் என்பது, தமிழ்நாட்டை தமிழகமாக சிறுமைப்படுத்துவது என தொடர்கிறது திரு.ரவியின் போக்கு.

சமீபகாலமாக போகிற இடங்களுக்கெல்லாம் தனது மனைவியையும் அழைத்துச்செல்கிறார், ஆளுநர் ஆர்.என். ரவி. அது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால், அவருடைய மனைவிக்குமான செலவினங்களும் தமிழ்நாடு அரசையே சாரும். அது கூட பரவாயில்லை. ஆனால்,ஆளுநர் மாளிகை தொடர்ந்து திரு.ரவி அவர்களின் மனைவி திருமதி லட்சுமி ரவி அவர்களை குறிப்பிடும் போது "லேடி கவர்னர்" என குறிப்பிட்டு வருகின்றது. கவர்னரின் மனைவியை லேடி கவர்னர் என அழைக்க அரசியலமைப்புச்சட்டம் வழி காட்டியுள்ளதா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் மனைவியை "லேடி முதல்வர்" என எந்த மாநிலத்திலாவது அழைக்கிறார்களா? எதற்காக ஆளுநர் மாளிகை இப்படியான மலிவான அரசியலை செய்கிறது. கவர்னரின் மனைவியை லேடி கவர்னர் என அழைக்கும் ஆளுநர் மாளிகை, அவரது மகனை,பேரனை எப்படி அழைக்கும்? ஆளுநர் மாளிகையின் அதிபுத்திசாலித்தனத்தைக் கண்டு சனநாயகமே சிரிக்கும்.

இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ரவிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி சமீபத்தில் தான் முதல்வரும், ஆளுநரும் சந்தித்து பேசி கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்க உள்ள நிலையில் இப்போது திடீர் என திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி  ஆளுநர் ரவியை மீண்டும் வம்புக்கு இழுப்பது போல் புதிய பிரச்சினையை கிளப்பி இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News