கள்ளச்சாராய சாவு குறித்து விசாரணை: கவர்னர் ரவியிடம் எடப்பாடி பழனிசாமி மனு
தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய சாவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரி கவர்னர் ரவியிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.;
தமிழகத்தில் நடந்த கள்ளச்சாராய சாவுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி ஆளுநர் ஆர். என். ரவியிடம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்தார்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்த 23 பேர் உயிரிழந்தார்கள். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .
இந்நிலையில் தஞ்சை கீழ அலங்கம் பகுதியில் நேற்று அரசு மதுபான டாஸ்மாக் பாரில் மது அருந்திய குப்புசாமி மற்றும் விவேக் ஆகிய இருவர் திடீரென உயிரிழந்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் தமிழகம் முழுவதும் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரியும் அ.தி.மு.க. சார்பில் பேரணி நடத்தி தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கப்படும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி அ.தி.மு.க.வினர் இன்று காலை சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அருகில் இருந்து கிண்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த பேரணியில் அ.தி.மு.க.வின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் சென்னை சென்னையின் முக்கிய சாலைகளில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கள்ளச்சாராய சாவு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது. அது பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என கூறி இருந்தார்.
ஆளுநரிடம் மனு அளித்த பின்னர் வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ந நிர்வாக அதிகாரி ஒருவர் மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் ஒரு கிராம நிர்வாக அதிகாரியை தாக்கி கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.
இவை எல்லாவற்றிற்கும் நேராக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 23 பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் அந்த இரு மாவட்டங்களிலும் 2000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அப்படி என்றால் கள்ள சாராயம் காய்ச்சுபவர்கள் யார் என்று இந்த அரசுக்கு தெரியும் என்பது தானே அர்த்தம்.
இந்த சம்பவம் நடந்த பின்னர் அரசு துரித நடவடிக்கை எடுத்திருந்தால் தஞ்சாவூரில் இரண்டு உயிர்ப்பலி ஏற்பட்டிருக்காது. எல்லாவற்றிற்கும் காரணம் பொம்மை முதல்வர் ஸ்டாலின் தான். அவர் திறனற்ற முதல்வராக உள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்து விட்டது.
தஞ்சையில் உயிரிழந்த இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று அந்த மாவட்ட ஆட்சியர் கூறி இருக்கிறார். அவரை அப்படி சொல்ல வைத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அரசு ஊழியர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். தஞ்சையில் இறந்த இருவரின் உடல்களையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் சாவுக்கு உண்மைனாய காரணம் என்ன என்பது தெரிய வரும்’ என்றார்.
எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ் பி வேலுமணி, தங்கமணி, கே.பி. முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோரும் சென்று இருந்தனர்.