‘கூட்டணி தர்மத்துடன் ஆட்சி நடத்துவேன்’ -எம்பி க்கள் கூட்டத்தில் மோடி

‘கூட்டணி தர்மத்துடன் ஆட்சி நடத்துவேன்’ -எம்பி க்கள் கூட்டத்தில் மோடி

Update: 2024-06-07 11:02 GMT

என்டிஏ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க போகும் மோடியின் அரசு தினமும் ஊசி முனையில் நிற்பது போல தான் கூட்டணி கட்சிகளின் தயவுடன் ஆட்சி நடந்தால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும் என்ற பேச்சு பரவலாக இருந்துள்ளது. ஆனால் கட்சிகளின் கணக்கை கூட்டி கழித்து பார்த்தால் இது போன்ற நெருக்கடிகளை கடந்து வருவது என்பது மோடி ,அமித்ஷா ஜோடிக்கு சுண்டைக்காய் விவகாரம் என்பது புரியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இப்போது பாஜகவிடம் 240 எம்பிக்கள் உள்ளனர். மற்ற 52 எம்பிக்களும் கூட்டணி கட்சியினர். இதில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் 16 ,நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 12 எம்பிக்களை கையில் வைத்திருக்கிறார்கள். இவர்கள் சபாநாயகர் பதவி வேண்டும், கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டும், துணை பிரதமர் பதவி வேண்டும் .மாநிலத்திற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிப்பதாக செய்திகள் கசிந்தாலும் அதற்கு மோடியின் சகாக்கள் தரும் பதில் வரும் புன்னகை மட்டும் தான்.

நெருக்கடி கொடுப்பதாக சொல்லப்படும் தெலுங்கு தேசம் கட்சியிடம் 16 மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திடம் 12 எம்பிக்கள் உள்ளனர். ஒரு வேலை ஐக்கிய ஜனதா தளம் தனது ஆதரவை வாபஸ் பெற்றால் பாஜக கூட்டணி பலம் 281 ஆக இருக்கும். அப்போதும் மத்திய அரசு பெரும்பான்மை இழக்காது. ஒருவேளை தெலுங்கு தேசம் விலகினால் பாஜக கூட்டணியின் பலம் 277 ஆக இருக்கும். அப்போதும் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஒருவேளை இருவரும் சேர்ந்து வெளியேறினால் பாஜக கூட்டணியின் பலம் 265 ஆக மாறும். அப்போது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அரசுக்கு ஏழு எம்பிக்கள் ஆதரவு வேண்டும்.

பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகும் பட்சத்தில் ஜெகன்மோகனின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு வரும். அவர்களிடம் 4எம்பிக்கள் உள்ளனர். இதுபோக பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம் ஒடிசாவில் நவீன் பட்நாயக் வசம் இருக்கும் ஒரு எம்பி சுயேட்சைகள் என பல வாய்ப்புகள் உள்ளன. இதுபோக மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரேயை  கூட்டணிக்குள் மீண்டும் இழுப்பது ஒன்றும் பாஜகவுக்கு பெரிய சவால் அல்ல. ஷிண்டேவை  மத்திய அமைச்சரவைக்குள் இழுத்து உத்தவ் தாக்கரேவை முதல்வராக்கி விடுவார்கள். இந்த சூட்சுமங்களை எல்லாம் புரிந்து கொண்டு தான்  தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும், பிரதமர் மோடிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற என்டிஏ எம்பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற என்.டி.ஏ. கூட்டணி தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பிரதமராக  தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு தலை வணங்குகிறேன். இந்தியாவில் 22 மாநிலங்களில் என்.டி.ஏ கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சி நடக்கிறது. அதிகார வெறி, பதவி ஆசையில் உள்ள ஒரு சிறு குழு தான் இண்டியா கூட்டணி 

நான் கூட்டணி தர்மப்படி ஆட்சி நடத்துவேன். அரசியல் சாசனப்படி அனைத்து மதத்தினருக்குமான ஆட்சியை தருவேன். என்.டி.ஏ. கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் எங்களின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.தமிழகத்தில் என்.டி.ஏ.வின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.கேரளாவில் வெற்றி கொடி நாட்டி உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News