நான் நிரபராதி என்னை சிக்க வைக்க யாரோ பின்னால் செயல்படுகிறார்கள்-டிடிவி
நான் நிரபராதி என டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் அமலாக்கத் துறையினர் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகரை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது டி.டி.வி.தினகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ''சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரிடம் நான் பேசியதும் கிடையாது'' என்று கூறினார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் தற்போது ஜாமீனில் இருக்கிறார்.
இதற்கிடையே, சுகேஷிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில், தினகரன் முன்பணமாக ரூ.2 கோடி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து, டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் டி.டி.வி.தினகரன் நேற்று ஆஜரானார். சுகேஷின் வாக்குமூலம் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 11 மணி வரை நீடித்தது.
இதன் பின்னர் வெளியே வந்த டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுகேஷ் சந்திரா ஒவ்வொரு முறையும் வரும்போது ஒரு வாக்குமூலம் கொடுப்பதின் காரணமாக விசாரணை நடத்துகிறார்கள். இந்த வழக்கில் சிக்க வைக்க சுகேஷ் சந்திரா திரும்ப திரும்ப வாக்குமூலத்தை மாற்றுகிறார் என்று நினைக்கிறேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை நான் நிரபராதி. எந்த தப்பும் செய்யவில்லை. யாரோ ஒருவர் கொடுக்கிற வாக்குமூலத்தால் என்னை அழைத்து கேட்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால் அழைத்து கேட்கிறார்கள்" என்றார்.