தி.மு.க.விற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வந்தது எப்படி? அண்ணாமலை கேள்வி

தி.மு.க.விற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் நிதி வந்தது எப்படி? என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2024-03-15 16:02 GMT

தேர்தல் பத்திர நன்கொடை தொடர்பாக பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், "ஒரு மாநிலத்தில் மட்டும் ஆட்சி செய்யும் திமுகவுக்கு எப்படி ஆயிரக்கணக்கான கோடி நன்கொடை?" என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் பத்திர நிதி திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பத்திர விபரங்களை எஸ்பிஐ வங்கி கடந்த மார்ச் 12ஆம் தேதி மாலையில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று தமது இணையதளத்தில் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி.

நாட்டிலேயே அதிக நன்கொடை பெற்ற கட்சியாக பாஜக முதலிடத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தேர்தல் பத்திரம் மூலம் பாஜக 6,060 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. பாஜகவிற்கு அடுத்தபடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 1,609 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாயும், பிஆர்எஸ் கட்சி 1,214 கோடியும் நன்கொடை பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் வேதாந்தா, மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாக நிதி அளித்துள்ளன.

நாட்டிலேயே அதிகபட்சமாக லாட்டரி மார்ட்டினின் நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் அதிக நன்கொடை கொடுத்துள்ளது. மொத்தமாக அந்த நிறுவனம் 1,368 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வழங்கியுள்ளது. மெகா இன்ஜினியரிங் மற்றும் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் 966 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது. பெரு நிறுவனங்களிடம் இருந்து கோடி கோடியாக நிதியைப் பெற்றுள்ள ஆளும் பாஜக, அவர்களுக்கு அனுகூலம் செய்துள்ளதாகவும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகள் நடத்தப்பட்ட சில நாட்களில் தேர்தல் நன்கொடைகள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "இதில் ஒளிப்பதற்கு ஒன்றுமே இல்லையே.. எல்லாமே வெளிப்படையாகத்தானே இருக்கிறது. மம்தா பானர்ஜி கட்சி ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருந்துகொண்டு ஆயிரம் கோடி ரூபாய் தேர்தல் நிதி பெற்றுள்ளது.  திமுக ஒரு மாநிலத்தில் இருந்து கொண்டு இவ்வளவு நிதி பெற்றுள்ளதே. நாங்கள் 18 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். எத்தனை அரசாங்கத்தை நடத்துகிறோம்.ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு வந்துள்ள நிதி இவ்வளவு. திமுக ஒரு மாநிலத்தில் ஆளும்போது எப்படி இவ்வளவு வந்தது? திமுகவுக்கு வந்துள்ள தேர்தல் நிதியில் 87% தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்ததுதான். அதை கேள்வி கேட்க வேண்டும். தேர்தல் பத்திர நிதியில் என்ன தவறு? முன்பு பெட்டியை தூக்கிக் கொண்டு வந்து நிதி கொடுப்பார்கள். அது வேண்டாம் என தேர்தல் பத்திர நிதி திட்டத்தை கொண்டு வந்தோம். இதைவிட சிறப்பாக செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறினால் அதற்கு முயற்சி எடுக்கிறோம். அரசு தான் முயற்சி எடுக்கவேண்டும். 

எங்களைப் பொறுத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயம் இல்லை. ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக எவ்வளவு நிதி பெற்றுள்ளது எனப் பாருங்கள். மம்தா பானர்ஜி நேற்று மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டார். திமுகவுக்கு யாரெல்லாம் தேர்தல் பத்திரம் நிதி மூலம் கொடுத்திருக்கிறார்கள் என்று நோண்டிப் பாருங்கள். பாஜக எப்போதும் வெளிப்படைத்தன்மையை வரவேற்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News