விசாரணைக்கு தடை விதிக்க முன்னாள் அமைச்சர் மணிக்கண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.;
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தன்னிடம் நடிகை பணம் பறிக்க முயன்றதாகவும், அது முடியாததால் பொய் புகார் அளித்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், நடிகை சாந்தினி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்கப் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராகத் துணை நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முதல் தகவல் அறிக்கை தெளிவாக இல்லை எனவும், தனக்கு எதிராக குறிப்பிட்டு குற்றச்சாட்டுகள் ஏதும் கூறப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தனக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளன என்பதைத் தெரிந்தே சம்மதத்துடன் உறவு கொண்டதால் இது பாலியல் வன்புணர்வு ஆகாது எனவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யவில்லை எனவும் மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார். நடிகையின் எந்தப் புகைப்படமும் வெளியிடப்படவில்லை எனவும், தனக்கு எதிரான புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய் எனவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, தன்னிடம் பணம் பறிக்க முயன்றபோது, அதற்கு இணங்காததால், நடிகை தனக்கு எதிராகப் பொய் புகார் அளித்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சரான தனது பெயருக்குக் களங்கம் கற்பிக்க அளிக்கப்பட்ட புகாரில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கும், நடிகை சாந்தினிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 25-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.