ஜூன் 2ம் தேதி பாஜகவில் இணைகிறார் ஹர்திக் படேல்

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில், காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. ஹர்திக் படேல் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைகிறார்.

Update: 2022-05-31 16:00 GMT

ஹர்திக் படேல்

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சூழலில், 2015ம் ஆண்டு பட்டிதார் சமூகத்தவர் இட ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தி, பிரபலமான ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இட ஒதுக்கீடு போராட்டத்தால் மக்களிடம் செல்வாக்கை பெற்ற ஹர்திக் படேலை தங்கள் பக்கம் இழுக்க, முன்னணி கட்சிகள் போட்டிபோட்டன. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட ஹர்திக், மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் நடத்திய பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களில் முன்னின்று வேலை பார்த்த ஹர்திக் படேல், பின்னர் தன்னை காங்கிரஸ் தலைமை கண்டு கொள்ளவில்லை என்று அதிருப்தியில் இருந்தார்.

இதையடுத்து, குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சியில் ஹர்திக் படேல் இணைவார் என்று கருதப்பட்டது. ஆனால், அவரை பாஜக தன் பக்கம் இழுத்துள்ளது. இன்னும் சில மாதங்களில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹர்திக் படேல் பாஜகவில் இணையவுள்ளார்.

இத்தகவலை உறுதி செய்துள்ள குஜராத் மாநில பாஜக, ஜூன் 2ம் தேதி இதற்கான விழா நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே பெரும் பின்னடவை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு, இது பலத்த அடியாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News