திண்டுக்கல் அருகே செந்தில்பாலாஜி ஆதரவாளர் வீட்டில் அமலாக்க துறை சோதனை
திண்டுக்கல் அருகே அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர் வீட்டில் அமலாக்க துறை அதிகரிகள் இன்று சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் அருகே அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்துறை தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் திடீர் என சோதனை நடத்தினார்கள்.
சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் கரூரில் உள்ள வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மேலும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் உட்பட நெருங்கிய உறவினர்கள் அவரது பினாமிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக நடைபெற்ற இந்த சோதனையின் இறுதி கட்டமாக ஜூன் 13ஆம் தேதி நள்ளிரவில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் இருதயத்திற்கு செல்லும் குழாயில் அடைப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் கோர்ட் உத்தரவின் படி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர் அதற்காக தேவைப்படும் வலுவான ஆதாரங்களை தேடி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக கரூரில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய சகாக்களின் வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீரா சாமிநாதன் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மேலும் அவரது தோட்டத்திலும் சோதனை நடைபெற்றது.
இதுவரை சென்னை, கோவை, கரூர் என செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் நடைபெற்று வந்த சோதனை இப்போது கரூர் மற்றும் சென்னையை தாண்டி திண்டுக்கல் மாவட்டத்திலும் நடந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.