ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு முப்பெரும் விழாவில் எடப்பாடி பழனிசாமி
கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு முப்பெரும் விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
கோவை கருமத்தம்பட்டியில் நடந்த தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு முப்பெரும் விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ,அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் அ.தி.மு.க.வில் சாதி, மதத்திற்கு இடமே கிடையாது. ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மத கடவுளை வழிபடுவதற்கு முழு சுதந்திரம் உண்டு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கி உள்ளார். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதில் ஒன்று கூட அவர் நிறைவேற்றவில்லை.
கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் முதல்வர் ஸ்டாலினால் ஏமாற்றப்பட்டுள்ளனர். விடியா தி.மு.க. அரசு முடிவுக்கு வந்தால் தான் கிறிஸ்தவ மக்கள் அவர்களுக்கு உரிய உரிமைகளை பெற முடியும். அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கிறிஸ்தவ பெருமக்களின் சிறுபான்மை மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவ மத பாதிரியார்கள் மற்றும் பிஷப்கள் கலந்து கொண்டனர். விழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலரும் கலந்து கொண்டனர். முப்பெரும் விழாவில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.