சொத்துகுவிப்பு வழக்கு; 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை

சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக 2 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-05-22 08:04 GMT
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே. பி. அன்பழகன். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இவர் தொடர்புடைய நிறுவனங்கள் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்தனர்.


இது போல கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர் தொடர்பான அலுவலகங்கள் அவரது நிறுவனங்களிலும்  லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். இது தொடர்பான வழக்குகளை தீவிர விசாரணையில் இருந்தது.

இந்நிலையில் கே.பி. அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 11.32 கோடி அளவிற்கு சொத்துக்கள் குவித்ததாக தர்மபுரி மாவட்ட கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது மனைவி ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது வருமானத்திற்கு அதிகமாக ரூ.39.82 கோடி அளவிற்கு சொத்துக்கள் சேர்த்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் முறையாக இந்த இரு முன்னாள் அமைச்சர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News