தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெறாததால் துரை முருகன் விரக்தி

தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பெறாததால் பொதுச்செயலாளர் துரை முருகன் விரக்தியில் உள்ளார்.

Update: 2024-01-31 14:21 GMT

தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகன்.

தி.மு.க.வில் அமைக்கப்பட்டுள்ள தொகுதி பங்கீட்டு குழுவானது, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வரும் நிலையில், நாங்க இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையையே ஆரம்பிக்கவில்லை எனக் கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் துரைமுருகன்.

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுகவில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, ஆகிய 6 பேர் அடங்கிய இக்குழுவில் துரைமுருகன் பெயர் இடம்பெறவில்லை. வழக்கமாக இது போன்ற கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் துரைமுருகன் பெயர் இடம்பெறுவது வழக்கம். இந்த முறை துரைமுருகன் முற்றிலும் ஓரங்கட்டி வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த முறை துரைமுருகன் பெயர் திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இல்லை. அதேபோல் திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு என எந்தக் குழுவிலும் துரைமுருகன் பெயர் இல்லை. இதனாலோ என்னவோ திமுக தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினர்களை நோஸ்கட் செய்யும் விதமாக திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையையே ஆரம்பிக்கவில்லை என வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருக்கிறார்.

கடந்த வாரம் தான் காங்கிரஸ் குழுவுடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த விவரம் கூட தெரியாமல் துரைமுருகன் இப்படி கூறினாரா அல்லது அவருக்கு தெரிந்தும் இப்படி சொன்னாரா எனத் தெரியவில்லை. இந்தியா கூட்டணி சிதறுவது குறித்த கேள்விக்கு இன்னும் ஃபைனல் ஆகவில்லையே, இந்தியா கூட்டணி இறுதியான பிறகு தான் அதைப்பற்றி கூற முடியும் எனச்சொல்லி நழுவிக்கொண்டார். இந்தியா கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே ஃபைனல் செய்யப்பட்ட ஒன்று என்பதும் அதிலிருந்து நிதிஷ், மம்தா உள்ளிட்டோர் விலகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News