‘தேர்தலில் பணபலத்தையும் தடுக்க வேண்டும்’ டாக்டர் ராமதாஸ் கருத்து

‘தேர்தலில் பணபலத்தையும் தடுக்க வேண்டும்’ என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-15 15:58 GMT
டாக்டர் ராமதாஸ்.

தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகச்சரியானது என பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல்களில் பண பலம் பயன்படுத்தப்படுவதையும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தையும் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுகளுக்ம் தனிநபர்கள் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்கி வருகின்றன. இத்தகைய நன்கொடையை தேர்தல் பத்திரங்கள் மூலம் மேற்கொள்ளும் முறையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018 ம் தேதி அறிமுகம் செய்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை செய்வது என்பது யார் நன்கொடை வழங்கினார்கள் என்பது பற்றிய விபரங்களை மறைக்கும் வகையில் இருந்தது. இதனால் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தான் தேர்தல் பத்திர முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி தேர்தல் பத்திர முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமாக உள்ளது. தேர்தல் பத்திர முறை, தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திர முறை திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால் அதனை ரத்து செய்யலாம். இது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம், தேர்தல் பத்திர முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும், தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது'' என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தான் உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்க்கட்சிகளின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாசும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்பதை வெளியுலகம் தெரிந்து கொள்ளாமல் இருக்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி அதை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது, அது குறித்த விவரங்களை கமுக்கமாக வைத்திருக்க வசதியாக வருமான வரி சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தங்களும் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் பணம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை அவசியமாகும். அதை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஓரளவாவது உறுதி செய்யும் என்று நம்புகிறேன். இதன் தொடர்ச்சியாக தேர்தல்களில் பண பலம் பயன்படுத்தப்படுவதையும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தையும் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News